மியான்மரில் நடப்பது 'இன அழிப்பு': அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம்

மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் 'இன அழிப்பு' நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மியான்மரின் ராக்கைன் மாகாணம், மெளங்டா பகுதியில் எரித்து சாம்பலாக்கப்பட்ட ஒரு ரோஹிங்கயா குடியிருப்புப் பகுதி (கோப்புப் படம்).
மியான்மரின் ராக்கைன் மாகாணம், மெளங்டா பகுதியில் எரித்து சாம்பலாக்கப்பட்ட ஒரு ரோஹிங்கயா குடியிருப்புப் பகுதி (கோப்புப் படம்).

மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் 'இன அழிப்பு' நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் சிறுபான்மை இனத்தவரான ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி அந்த நாட்டு அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்துக்கு முந்தைய விவாதத்தின்போது, ராக்கைன் மாகாணத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே ராணுவம் எடுத்து வருவதாக மியான்மர் அரசு கூறி வருவதற்கு எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத் தடுப்பு என்ற பெயரில் ராணுவமும், உள்ளூர் குழுக்களும் அப்பட்டமான இன அழிப்பில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், மியான்மரின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஆங் சான் சூகி, அந்தப் பதவியின் மாண்மைக் காக்கும் வகையில் ரோஹிங்கயாக்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க முன்வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
வங்கதேசத்தில் உள்ள மியான்மர் அகதிகள் முகாம்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்திய எம்.பி.க்கள் குழுவும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசியது. அதையடுத்து, மியான்மர் அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ராக்கைன் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமை ரோஹிங்கயா பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கினர். இதையடுத்து, அந்த மாகாணத்தில் ரோஹிங்கயாக்கள் வசித்து வந்த பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நிகழ்ந்த வன்முறை, தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, முஸ்லிம்களான ரோஹிங்கயாக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்தனர். கடந்த ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கயா அகதிகள் வங்கதேசத்தில் குவிந்தது, சர்வதேச அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com