இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு எதிராக புதிய அணி உதயம்

இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தருவதில் தமிழ்த் தேசியக் கூட்டணி மெத்தனம் காட்டுவதாக அதிருப்தியடைந்துள்ள தமிழ்க் கட்சிகள், அந்தக் கூட்டணியிலிருந்து விலகி

இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தருவதில் தமிழ்த் தேசியக் கூட்டணி மெத்தனம் காட்டுவதாக அதிருப்தியடைந்துள்ள தமிழ்க் கட்சிகள், அந்தக் கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணியை அமைத்துள்ளன.
இதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிகேஎல்ஃப்) கட்சியைச் சேர்ந்தவருமான சிவசக்தி ஆனந்தன் கூறியதாவது:
தற்போது இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளாகச் செயல்படும் தமிழ் தேசியக் கூட்டணிக்குப் பதிலாக, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது.
எங்களது ஈபிகேஎல்ஃப் கட்சியுடன், மூத்த அரசியல்வாதியான ஆனந்தசங்கரியின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எஃப்) உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
தமிழத் தேசியக் கூட்டணியின் கொள்கையுடன் தமிழ் கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை. எனவே, விரைவில் மேலும் பல கட்சிகள் எங்களது கூட்டணியில் இணையும்.
விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டணியை எதிர்த்து எங்களது கூட்டணி போட்டியிடும் என்றார் சிவசக்தி ஆனந்தன்.
தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தன், தனி ஈழம் கோருவதற்குப் பதிலாக ஒன்றுபட்ட இலங்கையிலேயே தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனினும், அவர் இலங்கை அரசிடம் மிதமாக நடந்து கொள்வதாக பல்வேறு தமிழக் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இலங்கை அதிபர் தேர்தலின்போது, முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சிங்களவாத அரசுக்கு எதிராகப் போட்டியிட்ட, மைத்ரிபாலா சிறீசேனா, தமிழர்களின் ஆதரவுடன் தற்போது அதிபராகப் பதவி வகித்து வருகிறார். எனினும், தமிழர்களுக்கு உரிய நீதியை சிறீசேனா வழங்கத் தவறிவிட்டதாக தமிழ்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருவதாக இலங்கை அரசு கூறி வருகிறது.
எனினும், இறுதிக் கட்டப் போரின்போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிள் தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதில் இலங்கை அரசு மெத்தனமாகச் செயல்படுவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
ஐ.நா.வின் கணக்குப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 40,000 தமிழர்கள் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com