சிறைகளைப் பற்றி மல்லையா கவலைப்பட வேண்டாம்; 'சிறப்பாகவே' இருப்பார் : இந்திய அரசு

ரூ.9,000 கோடி அளவுக்கு வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையா, இந்திய சிறைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று இந்திய அரசு சார்பில்
சிறைகளைப் பற்றி மல்லையா கவலைப்பட வேண்டாம்; 'சிறப்பாகவே' இருப்பார் : இந்திய அரசு


லண்டன்: ரூ.9,000 கோடி அளவுக்கு வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையா, இந்திய சிறைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் அதிகாரபூர்வ விசாரணை கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, விஜய் மல்லையா தரப்பில் கூறப்பட்டதாவது, இந்திய சிறைகளில் கொடுமைப்படுத்தப்படலாம் என்று அஞ்சப்படுவதாகவும், பைகுலா சிறைச்சாலையில் கடந்த ஜூன் 23ம் தேதி பெண் கைதி மஞ்சுளா ஷெட்டி என்பவர் கொலை செய்யப்பட்டதாகவும், ஒரு வேளை மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினால், சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகிறார் என்றும் வாதிடப்பட்டது.

இதற்கு இந்திய தரப்பில் கூறப்பட்டதாவது, இந்திய சிறைகளைப் பற்றி உலகளவில் தவறாக அபிப்ராயம் நிலவுகிறது. இந்திய சிறைகள் நரகம் என்று மக்கள் கருதுகிறார்கள். இந்திய சிறைகளைப் பற்றிய எதிர்மறையான தகவல்களையே சர்வதேச ஊடகங்கள் பரப்புகின்றன. ஆனால் அவை அப்படி இல்லை. அந்த உருவகத்தை நாங்கள் மாற்ற முயன்று வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், மும்பையில் உள்ள சிறைச்சாலையில் சிறப்பு வகுப்புகள் உள்ளன. ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்ட கைதிகள் அதில் வைக்கப்பட்டிருந்தனர். மல்லையா அந்த சிறையில் அடைக்கப்பட்டு அவருக்கு தனி கழிவறை, தொலைக்காட்சி என எல்லாமே வழங்கப்படும். சிறையில் விஜய் மல்லையாவுக்கு எதுவும் நேராது. அதற்கு இந்திய அரசாங்கம் உறுதி அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில், மல்லையாவுக்கு எதிராக இந்திய அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்று உறுதியோடு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு கடத்தும் வழக்கு விசாரணையின் தொடக்கத்தில், விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.2,000 கோடி கடன் தொடர்பான ஆவணங்கள் இந்திய அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டன. அப்போது, கடன் வழங்குவதில் இந்திய வங்கிகளில் விதிமீறல்கள் நடைபெறுவது உண்டு என இந்தியத் தரப்பு வழக்குரைஞர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து விஜய் மல்லையா நீதிபதிகளிடம் கூறுகையில், "என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை; புனையப்பட்டவை; அடிப்படை முகாந்திரமற்றவை' என்று கூறினார்.

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து பெற்ற ரூ.9,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக, விஜய் மல்லையா பிரிட்டனில் தஞ்சமடைந்தார்.

அதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி பிரிட்டனுக்கு மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. 

இதன் தொடர்ச்சியாக, மல்லையாவை லண்டனில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கைது செய்தனர். எனினும், ரூ.5 கோடி (65 ஆயிரம் பவுண்டு) பிணைத் தொகை செலுத்தி, கைதான மூன்று மணிநேரத்திலேயே மல்லையா ஜாமீனில் வெளிவந்தார். எனினும், அவரது கடவுச்சீட்டுகள், நுழைவு இசைவு (விசா) உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கின் அதிகாரபூர்வ விசாரணைதான் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நீதிபதி எம்னா லூஸி அர்பத்நாட் விசாரணை மேற்கொள்ளும் இந்த வழக்கில், அடுத்த ஆண்டின் தொடக்கத்துக்குள் தீர்ப்பு அளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில், விஜய் மல்லையாவுக்காக பிரிட்டனைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞர் கிளார் மான்ட்கோமரி தலைமையிலான வழக்குரைஞர் குழு வாதாடி வருகிறது. பிரிட்டனில் மிகப் பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களையும் வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு கிளார் மான்ட்கோமரி பெயர் பெற்றவர் ஆவார்.

இந்திய அரசுக்காக, "கிரெளன் பிராஸிக்யூஷன் சர்வீஸ்' என்ற வழக்காடு நிறுவனம் இந்த வழக்கில் ஆஜராகி வாதிடுகிறது. விஜய் மல்லையாவை இந்திய நீதிமன்றங்களில் வைத்து விசாரணை நடத்துவதற்குத் தேவையான குற்றங்களை அவர் புரிந்துள்ளார் என்பதை அந்த நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும்.

இந்த வழக்கில், இந்தியச் சிறைச் சாலைகளின் நிலைமை மிக முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவரும், பிரிட்டனில் தஞ்சமடைந்தவருமான சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லாவை நாடு கடத்த மத்திய அரசு முயற்சி செய்தது. 

எனினும், இந்தியச் சிறைகளில் தனக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக அவரது சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டதை அடுத்து, மத்திய அரசின் கோரிக்கையை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிராகரித்தது.

தங்கள் நாட்டில் தஞ்சமடையும் குற்றம்சாட்டப்பட்டவர்களை பரஸ்பரம் நாடு கடத்துவதற்கு வசதியாக பிரிட்டன்-இந்தியா இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இதுவரை, ஒரே ஒருவர் மட்டுமே பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

அவர், குஜராத் மாநிலம், கோத்ராவில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட சமீர்பாய் வினுபாய் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com