சீன எல்லைக்குள் நுழைந்த இந்தியாவின் ஆளில்லா விமானம்!

சீனாவின் வான் எல்லைக்குள் நுழைந்த இந்தியாவின் ஆளில்லாத விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது.

சீனாவின் வான் எல்லைக்குள் நுழைந்த இந்தியாவின் ஆளில்லாத விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது.
இதையடுத்து, இந்தியத் தரப்பு தங்கள் எல்லைக்குள் அத்துமீறி விமானத்தைப் பறக்கவிட்டதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. அதே நேரத்தில் அந்த ஆளில்லா விமானம் கட்டுப்பாட்டை இழந்து சீன எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சில நாள்களுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ஆளில்லாத சிறிய ரக விமானம் ஒன்று சீன வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. சீன எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதனை அடையாளம் கண்டு, அந்த விமானத்தைக் கண்காணித்தனர். பின்னர் சிக்கிம் பகுதிக்குள் சென்று அந்த விமானம் விழுந்து நொறுங்கிவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் சீனா, ராஜீயரீதியில் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது என்றார் அவர்.
சிக்கிமில்தான் பிரச்னை ஏற்பட்ட டோக்கா லாம் பகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், "சீனாவின் இறையாண்மையைச் சிதைக்கும் வகையில் எல்லைக்குள் இந்திய ஆளில்லா விமானம் அத்துமீறி ஊடுருவியுள்ளது. இதனால் கடும் அதிருப்தியடைந்துள்ள சீனா, தனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் இந்தியாவிடம் தெரிவித்துள்ளது. நமது எல்லையைப் பாதுகாப்பதில் ராணுவம் முழு பலத்துடன் செயல்பட்டு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம்: இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் சிறிய ரக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்வது வழக்கம்தான். சிக்கிம் பகுதியிலும் அதேபோன்ற பயிற்சி நடைபெற்றது. அப்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம், எல்லையைக் கடந்து சென்றுவிட்டது. உடனடியாக, இது தொடர்பாக சீன எல்லைப் பாதுகாப்புப் படைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த விமானத்தைக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் இவ்வாறு தகவல் தெரிவிப்பது வழக்கமாகும்.
அந்த விமானம் இந்தியப் பகுதிக்கே திரும்பிவிட்டதாக சீனத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. விமானம் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com