ஜெருசலேம்: அமெரிக்க முடிவைக் கைவிட அரபு நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் முடிவை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற அரபு நாடுகள் கூட்டமைப்பு மாநாடு.
ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற அரபு நாடுகள் கூட்டமைப்பு மாநாடு.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் முடிவை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
அரபு நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் சனிக்கிழமை இரவு அவசரக் கூட்டம் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் நிறைவடைந்தது. கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 22 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் அதில் கலந்து கொண்டனர். 
அவசரக் கூட்டத்தில் ஜெருசலேம் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜெருசலேமில் இஸ்ரேலுக்கான தூதரகத்தை அமெரிக்கா அமைக்கவுள்ளதையும், அந்த சர்ச்சைக்குரிய நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதையும் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
நீண்ட விவாதத்தின் முடிவில், அமெரிக்காவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்தும், அந்த முடிவை மாற்றிக் கொள்ளும்படியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இது தொடர்பாக அரபு நாடுகள் கூட்டமைப்பின் தலைவர் அகமது அபுல் கெய்த் கூறியது:
ஜெருசலேம் கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. 
தற்போது அந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது ஏற்க முடியாததாகும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டிருக்கிறது என்று அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. 
இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் மைய விஷயமே ஜெருசலேமின் அந்தஸ்து என்ன என்பதுதான். அந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதால் அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது என்று பொருளாகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முடிவைக் கைவிட வேண்டும்.
அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் காட்டும் வகையில் அரபு கூட்டமைப்பில் தீர்மானம் நிறைவேற்ற சில நாடுகள் வற்புறுத்தின. அமெரிக்காவின் முடிவை வேறு ஏதேனும் நாடுகள் பின்பற்றினால் அந்த நாடுகள் மீது கடுமையான நடவடிக்கையை அரபு நாடுகள் எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல மிதவாத அரபு நாடுகள் அந்த ஆலோசனையை எதிர்த்தன.
டிரம்ப்பின் அறிவிப்பு சர்வதேச சட்டங்களுக்கும் தீர்மானங்களுக்கும் விரோதமானது. டிரம்ப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் அந்தத் தீர்மானத்தை தள்ளுபடி செய்தால், ஐ.நா. பொதுக்குழுவில் அதே போன்ற தீர்மானத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
பாலஸ்தீன் என்கிற சுதந்திரமான நாட்டை அங்கீகரிப்பதுடன், கிழக்கு ஜெருசலேம் பகுதியை பாலஸ்தீன் தலைநகராக அறிவித்தால்தான் இஸ்ரேல்-அரபு நாடுகள் மோதல் நிற்கும். கடந்த 2002-ஆம் ஆண்டில் அரபு நாடுகள் சார்பில் நீடித்த அமைதிக்கான ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, 1967-இல் இஸ்ரேல் ஆக்கிரமித்த ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளை அந்த நாடு கைவிட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு செய்தால் இஸ்ரேல் என்னும் நாட்டை அரபு நாடுகள் அங்கீகரிக்கும் என்று தெரிவித்துள்ளோம். 
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவ அதுவே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com