இஸ்ரேலின் ஜெருசலேம் கனவு மெய்ப்படுமா? -2

ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தவுடன், ஓர் இஸ்ரேலிய நாளிதழ் இவ்வாறு கூறியது:
இஸ்ரேலில் உள்ள 'குரூசேடர்' கோட்டை.
இஸ்ரேலில் உள்ள 'குரூசேடர்' கோட்டை.


பாலஸ்தீனப் பிரச்னை
ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தவுடன், ஓர் இஸ்ரேலிய நாளிதழ் இவ்வாறு கூறியது:
'ஜெருசலேம் என்பது வெடி மருந்து நிரப்பிய குடுவையைப் போன்றது. அந்த விவகாரத்தில் சின்னஞ்சிறு தவறு செய்தாலும் அது தீப்பொறியைக் கிளப்பி மிகப் பயங்கரமான மதப் போரை வெடிக்கச் செய்யும்'.
உண்மைதான்.
அந்தக் காரணத்துக்காகத்தான் ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளுமே ஜெருசலேம் விவகாரத்தில் யார் பக்கமும் சாய்வதற்குத் தயக்கம் காட்டி வருகின்றன.
யூதர்களுக்கு ஜெருசலேம்தான் அவர்களது ஒரே கடவுளின் ஜென்ம பூமி. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்கள் அந்த மண்ணைவிட்டு விரட்டியடிக்கப்படும் போதெல்லாம், மீண்டும் அந்த புண்ணிய பூமியை அடைவதுதான் யூதர்களின் கனவாக இருந்து வருகிறது.
அந்தக் கனவுதான், தற்போது பாலஸ்தீனப் பிரச்னைக்கும் ஆணிவேராக இருக்கிறது என்று கூட சொல்ல முடியும்.
தற்போது உலக அளவில் பரவி, பல உயிர்களை பலி வாங்கி வரும் பயங்கரவாத நெருப்புக்கு தூபம் போட்டு விசிறி விடுவது ஒரு வகையில் இந்தப் பிரச்னைதான்.
பாலஸ்தீனப் பிரச்னைதான் என்ன, அது உருவான வரலாறு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல், ஜெருசலேம் நகரை அடையும் யூதர்களின் ஆதி காலக் கனவு மெய்ப்படுமா என்பது குறித்த தெளிவு பிறக்காது.
உலகில் இது வரை தீராமல் நீண்டு வரும் பல பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கும் பிரிட்டன்தான், பாலஸ்தீனப் பிரச்னைக்கும் அஸ்திவாரம் போட்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
பாலஸ்தீனம் என்பது உலகின் மிகப் புராதன நாகரிகங்கள் செழித்து வளர்ந்து, எகிப்தியர்கள், மெசபடேமியர்கள், கிரேக்கர்கள், பாபிலோனியர்கள் என பலராலும் ஆளப்பட்ட பகுதி.
கி.மு. 330-களில் அலெக்ஸாண்டர் கைப்பற்றிய பிறகு, பாலஸ்தீனம் பல்வேறு கைகளுக்கும் மாறி வந்தது.
பாலஸ்தீனத்தின் பெரும்பாலான சமஸ்தானங்களை ஒன்றிணைத்து 'ஹாஸ்மோனியர்கள்' கி.மு. 110-ஆம் ஆண்டு முதல் ஆண்டு வந்தனர். பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியில் யூத மதம் தழைத்து வளர்ந்த நிலையில், கி.மு 70-60-களில் அந்தப் பகுதி ரோமானியர்களிடம் கைமாறியது.
இந்த நிலையில்தான், கி.மு.28-30-களில் நடைபெற்றதாக வரலாற்று அறிஞர்களால் கருதப்படும் இயேசு பிரானை சிலுவையில் அறையும் நிகழ்வுக்குப் பிறகு கிறிஸ்தவ மதம் அந்தப் பிராந்தியத்தில் வெகு வேகமாகப் பரவியது. கிறிஸ்தவப் பேரரசர் கான்ஸ்டன்டைன் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ரோமானியப் பேரரசு கிறிஸ்தவமயானது. அந்தப் பேரரசின் கீழ் இருந்த ஜெருசலேம் நகருக்கு மத போதகரான புனித ஹெலனா கி.பி. 326-இல் அனுப்பப்பட்ட பிறகு, நகரம் முழுவதும் தேவாலயங்கள் கட்டியெழுப்பப்பட்டன. சிறிது காலத்திலேயே கிறிஸ்தவ மதத்தின் தொட்டிலாக மாறியது ஜெருசலேம்.
இந்தச் சூழலில்தான், முகமது நபியின் வழித் தோன்றல்களால் உருவாக்கப்பட்ட முதல் இஸ்லாமியப் பேரரசு (கலீஃபா) லெவன்ட் (புராதன சிரியா) பகுதியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து ஜெருசலேம் நகரமும் இஸ்லாமியக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
கி.பி. 691-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, இன்றும் அந்த நகரில் கண்களைப் பறித்துக் கொண்டிருக்கும் ஸக்ராஹ் மசூதிதான், உலகில் முதல் முறையாக எழுப்பப்பட்ட இஸ்லாமிய கலைக் கட்டடம் என்கிறார்கள்.
ஜெருசலேமில் இஸ்லாமிய மதப் பேரரசு நடந்தாலும், பெரும்பான்மை கிறிஸ்தவ மக்கள் அமைதியாகவே வாழ்ந்து வந்தனர் - எகிப்து மற்றும் சிரியாவின் பேரரசர் சலாதீனின் படையெடுப்பு வரை!
அதுவரை ஜெருசலேமில் நடைபெற்ற முஸ்லிம் ஆட்சி, அந்தப் பகுதியின் மதம், கலாசாரம், சமூக வாழ்வில் பல ஆண்டுகளாக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அந்தப் பகுதியில் வசித்த அரேபியர்கள் பெரும்பாலும் நாடோடிகளாகவே இருந்தனர்.
ஆனால், கி.பி. 1187-ஆம் ஆண்டு சலாதீன் படையெடுத்த பிறகு நிலைமை மாறியது. பாலஸ்தீனத்தின் பெரும்பகுதி சலாவுதீனின் பரம்பரையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எனினும், பாலஸ்தீனத்தின் வடக்குப் பகுதியில் இருந்த சில நகரங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவர்களின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தது. இந்தக் காலகட்டத்தில், முஸ்லிம் ஆதிக்கத்தை ஒழிக்க அவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. 
(அவ்வாறு போரிட்டவர்கள்'குரூசேடர்' - அறப் போராளிகள் - என்று அழைக்கப்பட்டனர். அந்தப் பெயரைத்தான் 'முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள்' என்னும் பொருள்படும் வகையில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளைக் குறிக்க தற்போது பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர்).
இந்த நிலையில், மேற்கு ஆசியப் பகுதி முழுவதையும் தங்கள் வசம் கொண்டு வர விரும்பிய ஓட்டோமன் பேரரசு, கி.பி. 1516-இல் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியது. அதற்குப் பிறகு, 1500-களின் மத்தியிலிருந்து, 1800-களின் மத்தியப் பகுதி வரை உள்ளூர் அரசர்களின் உதவியுடன் பாலஸ்தீனத்தின் பகுதிகள் ஓட்டோமன் பேரரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தன.
எனினும், உள்நாட்டில் எழுந்த கலவரங்களைக் கட்டுப்படுத்துவதில் அந்தப் பேரரசுக்கு உதவி செய்வது போல் 1830-களில் பிரிட்டன் உள்ளே நுழைந்தது. அதற்குப் பிரதி உபகாரமாக (இந்தியாவில் செய்தது போல்) வணிக உரிமைகள் போன்ற சலுகைகளை எழுதிப் பெற்றுக் கொண்டது. 
இதற்கிடையே, ஐரோப்பிய பாணியைப் பின்பற்றி பாலஸ்தீனத்தில் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஓட்டோமன் பேரரசு கொண்டு வந்தது. இந்த வளர்ச்சியால் அரேபிய முஸ்லிம்கள் மட்டுமன்றி, கிறிஸ்தவர்களும் பெரும் பயன் அடைந்தனர். 
இந்த நிலையில்தான், அரசர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் போன்ற காரணங்களால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்கள், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனம் திரும்பினர். அந்தப் பகுதியில் காணாமல் போயிருந்த தங்களது மொழி, மற்றும் கலாசாரத்தையும் புனரமைத்தனர்.
இத்தகைய சூழலில், பிரிட்டன் அரசு 1917-ஆம் ஆண்டு வெளியிட்ட 'பால்ஃபோர் பிரகடனம்'தான் பாலஸ்தீனத்தில் இன்று கொழுந்துவிட்டு எரியும் பிரச்னைக்கு அச்சாரம் போட்டது எனலாம்.
-நாகா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com