அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டிரம்ப்

அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் டிரம்ப்

அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அதிக வயதில் (70) அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவர் என்ற சாதனையை டிரம்ப் படைத்துள்ளார்.
டொனால்ட் டிரம்புக்கு முன்னதாக அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மைக் பென்ஸ், துணை அதிபராகப் பதவியேற்றார். அதிபர் பதவியேற்கும் முன்னர் துணை அதிபருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது அமெரிக்க நடைமுறையாகும்.
ஒபாமாவுடன் சந்திப்பு: முன்னதாக, அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் டிரம்ப் சந்தித்துப் பேசினார். ஒபாமா, அவரது மனைவி மிஷெல் ஒபாமா சார்பில், டிரம்ப், அவரது மனைவி மெலாயாவுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஒபாமாவும், டிரம்ப்பும் கூட்டாக நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.
ஹிலாரி பங்கேற்பு: அதிபர் தேர்தலில் டிரம்பிடம் தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டன், அவரது கணவரும் முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன், முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஜிம்மி கார்ட்டர் உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுமார் 8 லட்சம் பேர் முன்னிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்றார்.
முன்னதாக கடந்த நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை, குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வென்றார். அதிபராகப் பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
கடும் போட்டி... முன்னதாக, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்விலும் கடுமையான போட்டியை டிரம்ப் எதிர்கொண்டார்.
அமெரிக்காவின் 41-ஆவது அதிபர் ஜார்ஜ் புஷ் மகனும், 43-ஆவது அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் சகோதரருமான ஜெப் புஷ் உள்பட 16 வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, துளிக்கூட அரசியல் அனுபவம் இல்லாத டிரம்ப் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராக வெற்றி பெற்றார்.
அவருடைய சோதனைகள் அத்துடன் முடியவில்லை. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன், தனிப்பட்ட முறையில் டிரம்ப்பை விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டார். அவரது மனைவி மெலானியாவையும் ஹிலாரியின் ஜனநாயகக் கட்சியினர் விட்டு வைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு டிரம்ப் பதிலளிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், தனது ஆக்ரோஷமான பிரசார உத்தியையும் அவர் இறுதி வரை மாற்றிக் கொள்ளவில்லை.
நான் அமெரிக்க அதிபராவேன் என்று 1987-ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டார். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் டிரம்ப்பை கேலி செய்து அன்றைய அதிபர் ஒபாமா பேசினார். இதைத் தொடர்ந்து ஒபாமா அமெரிக்காவில் பிறக்காதவர் என்ற கடுமையான பிரசாரத்தை டிரம்ப் மேற்கொண்டார்.
அமெரிக்க அரசியல் சாசனப்படி, அந்த நாட்டில் பிறந்த நபர்தான் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியும்.
யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அதிபர் தேர்தல் களத்தில் குதித்தார். அதிபர் வேட்பாளர் தேர்வில் அவர் ஒரு சுற்று வந்த பின்னர், அவர் விலகிவிடுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி, குடியரசுக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பழுத்த அரசியல்வாதியான ஹிலாரியிடம் டிரம்ப் பரிதாபகரமாகத் தோற்றுப் போவார் என்ற எண்ணத்தையும் அவர் பொய்த்துப் போகச் செய்தார்.
வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு போன்ற விவகாரங்களை முன்வைத்து நடுத்தர வகுப்பு வாக்காளர்களை அவர் கவர்ந்தார்.
அதிபர் தேர்தலிலும் இறுதி வெற்றி டிரம்ப்புக்கே கிடைத்தது. கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவரது வெற்றி உலக அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
பதவியேற்புக்கு முன்னர் வெள்ளிக்கிழமை காலையில் வெள்ளை மாளிகை அருகில் உள்ள வாஷிங்டன் தேசிய தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டில் அவர் கலந்து கொண்டார். துணை அதிபராகப் பதவியேற்கும் மைக் பென்ஸýம் வழிபாட்டில் கலந்து கொண்டார்.
பதவிப் பிரமாணத்தில் அவர் பயன்படுத்தும் பைபிள் ஆபிரகாம் லிங்கன் 1861-இல் பயன்படுத்திய பிரதியாகும்.
டிரம்ப் 45-ஆவது அதிபர் என்றபோதிலும், அமெரிக்க வரலாற்றில் 1789-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் 58-ஆவது அதிபர் பதவி ஏற்பு நிகழ்ச்சி இதுவாகும். இடையே பல அதிபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அதிபர் பதவி வகித்தவர்கள் என்பதால், அதிபர்கள் எண்ணிக்கையைவிட பதவியேற்பு நிகழ்ச்சிகள் கூடுதலாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com