ஒபாமா மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ரத்து: அமெரிக்க அதிபராக டிரம்ப் முதல் கையெழுத்து

அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஒபாமா அறிமுகம் செய்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வரும் உத்தரவில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான உத்தரவில் கையெழுத்திடும் டிரம்ப். உடன், துணை அதிபர் மைக் பென்ஸ் (இடது).
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான உத்தரவில் கையெழுத்திடும் டிரம்ப். உடன், துணை அதிபர் மைக் பென்ஸ் (இடது).

அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஒபாமா அறிமுகம் செய்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வரும் உத்தரவில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

அதிபராகப் பதவியேற்றதும் டிரம்ப் கையெழுத்திட்ட முதல் உத்தரவு இதுவாகும். அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதுதான் எனது அரசின் கொள்கையாகும். இந்தத் திட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நிதிச் சுமையை அகற்றும் விதத்தில் மாற்றுத் திட்டத்தை அறிமுகம் செய்வோம்.
புதிய திட்டம் அறிவிக்கும் வரையில் தற்போதுள்ள திட்டத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கும் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் களையும் விதத்தில் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு அமைச்சர்களை நியமிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
முன்னதாக, அவர் பதவி ஏற்றதும் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது: கடந்த சில ஆண்டுகளாக நாட்டைவிட்டு வெளியேறிய தொழிலகங்களை மீண்டும் அமெரிக்காவில் செயல்படச் செய்யும் விதமாக தொழிலக கொள்கை அறிவிப்பு விரைவில் வெளியாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வாஷிங்டனில் உள்ள சிலரின் கைகளில் மட்டுமே அதிகாரம் குவிந்திருந்தது. ஆனால் எனது ஆட்சியில் அதிகாரம் சாதாரண மக்கள் கையில் இருக்கும். அமைதியும் வளமும் மிக்க நான்கு ஆண்டு கால ஆட்சியை நான் அளிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
நமது நாட்டு எல்லைகளைப் பாதுகாப்பானதாகச் செய்வோம். அமெரிக்க குடிமக்கள் எந்த மதம், எந்தப் பிரிவு, எந்தக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாதுகாப்புடனும் வளத்துடன் வாழ வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலை வலிமையாக எதிர்த்துப் போராடுவேன். அமெரிக்காவை அனைத்து விதத்திலும் மீண்டும் வலிமை மிக்க நாடாக்குவேன் என்றார்.
எதிர்ப்புப் பேரணி: டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.
எதிர்ப்புப் பேரணி நடைபெற்ற இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதலில் டிரம்ப் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பியபோதிலும், எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் பின்னர் வன்முறையில் ஈடுபட்டனர்.
சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட கார்களை அடித்து நொறுக்கினர். பல கடைகளின் கண்ணாடி முகப்புகள் உடைக்கப்பட்டன. ஒரு சொகுசுக் கார் தீக்கிரையாக்கப்பட்டது. போலீஸார் மீது கல்வீச்சு நிகழ்ந்தது. இதையடுத்து, பேரணியினர் மீது போலீஸார் மிளகுப் பொடி தூவி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். வன்முறையில் இரு போலீஸார் காயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதற்காக 217 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
நியூயார்க் நகரம் உள்பட நாட்டின் வேறு சில நகரங்களிலும் எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன.

"சகிப்பின்மை'

சகிப்புத் தன்மையில்லாதவர்கள் தன்னைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர் என்று அதிபர் டிரம்ப் கூறினார்.
மாலையில் நடைபெற்ற சிறப்பு விருந்து மற்றும் நடன நிகழ்ச்சியில் இவ்வாறு தெரிவித்தார்.
விருந்தினிடையே பேசிய டிரம்ப் கூறியதாவது: கடுமையான எதிர்ப்பு வந்தபோதெல்லாம் அதைக் கடந்து வெற்றி பெற்றேன். வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட நேரங்களில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு வெற்றி பெற்றேன். இப்போது அதிபராக உங்கள் முன் நிற்கிறேன். அரசியல் அதிகார வர்க்கத்தைச் சேராத ஒரு நபர் உயர்ந்த பதவியில் அமர்வதை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் என்னைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். எனது பதவிக் காலத்தில் வரும் எதிர்ப்புகளை மீறி சிறந்த அதிபராகச் செயல்படுவேன் என்றார்.

ஹிலாரிக்கு நன்றி

பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த ஹிலாரியை அந்த விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
அந்த மதிய விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹிலாரி வந்ததும், நேரடியாகச் சென்று அவரை வரவேற்றார் டிரம்ப்.
"பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தம்பதியாக வந்து என்னை கெüரவித்தீர்கள். இப்போது விருந்து அழைப்பை ஏற்று இங்கு வந்து மீண்டும் என்னை கெüரவித்துள்ளீர்கள்' என்று டிரம்ப் கூறினார்.
சிறப்பு மதிய விருந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முப்படைகளின் மூத்த தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


டுவிட்டர் ஆதரவாளர்கள்

டுவிட்டர் சமூக வலைதளத்தில் டிரம்ப்புக்கு ஏற்கெனவே சுமார் 2 கோடி ஆதரவாளர்கள் உள்ளனர். அவர் அதிபராகப் பதவியேற்றதும் உருவாக்கப்பட்ட டுவிட்டர் கணக்கில் புதிதாக லட்சக்கணக்கானவர்கள் அவரைப் பின்தொடரத் தொடங்கினர்.
பதவியேற்ற சில மணி நேரத்திலேயே அமெரிக்க அதிபருக்கான அதிகாரபூர்வமான டுவிட்டர் கணக்கில் அவருக்கு 1.4 கோடி ஆதரவாளர்கள் இணைந்தனர். விருந்து நிகழ்ச்சியில் பேசுகையில், டுவிட்டரில் எனது கருத்துகளையும் எண்ணங்களையும் தொடர்ந்து பதிவு செய்வேன் என்றார். நேர்மையற்ற ஊடகங்களை நம்பாமல், சமூக வலைதளங்கள் வழியாக நேரடியாக மக்களுடன் உரையாடுவேன் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com