இஸ்ரேலில் மோடியை சந்திக்கப் போகும் சாண்ட்ராவின் மனம் திறந்த பேட்டி

தனது உயிரைப் பணயம் வைத்து, இஸ்ரேலைச் சேர்ந்த யூதக் குழந்தையைக் காப்பாற்றிய இந்திய செவிலியர் சாண்ட்ரா, செவிலியர் பணிக்கு மட்டும் அல்லாமல், இந்தியாவுக்கும் பெருமைச் சேர்த்தவர்.
இஸ்ரேலில் மோடியை சந்திக்கப் போகும் சாண்ட்ராவின் மனம் திறந்த பேட்டி

தனது உயிரைப் பணயம் வைத்து, இஸ்ரேலைச் சேர்ந்த யூதக் குழந்தையைக் காப்பாற்றிய இந்திய செவிலியர் சாண்ட்ரா, செவிலியர் பணிக்கு மட்டும் அல்லாமல், இந்தியாவுக்கும் பெருமைச் சேர்த்தவர்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது 2 வயது யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்திய செவிலியர் சாண்ட்ரா சாமுவேல், இஸ்ரேலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதற்கு இதுதான் மிகமுக்கியக் காரணம்.

செவ்வாய்க்கிழமை முதல் (ஜூலை 4) இஸ்ரேலில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் மோடி, ஜெருசலேம் நகரில் தங்கியுள்ள சாண்ட்ரா சாமுவேலை சந்தித்துப் பேசவிருக்கிறார்.

இந்த நிலையில், சாண்ட்ரா சாமுவேல் இந்தியாவில் வெளியாகும் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல நெஞ்சை உருக்கும் விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அலெஹ் ஜெருசலேம் மையத்தில், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையத்தில் சாண்ட்ரா பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும், 53 வயதாகும் சான்ட்ரா, தான் பணியாற்றும் இடத்தில் இருந்து 95 கி.மீ. தொலைவில் உள்ள அஃபுலாவுக்கு பேருந்து ஏறி விடுகிறார். அஃபுலாவில் தான் மோஷி தனது தாத்தா-பாட்டியுடன் வசித்து வருகிறான். அவனை சோனு என்று சாண்ட்ரா அழைப்பது வழக்கம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சாண்ட்ரா, மோஷியுடன்தான் இருப்பார். கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே அவனை சந்திக்க முடியாமல் போனது என்கிறார் வருத்தத்தோடு.

சாண்ட்ராவே தொடருகிறார்...
மோஷி வளர்ந்துவிட்டான். தற்போது அவனுக்கு 10 வயது ஆகிறது. அவனுக்கு கால்பந்து விளையாட பிடிக்கும். டென்னிஸ் விளையாடுவான்.

சம்பவம் நடக்கும் போது அவனுக்கு வெறும் 2 வயது. அவன் சிறு குழந்தை, ஆனால், 26/11, அந்த நாள் எனது மனக்கண்ணில் இன்றும் ஒரு பயங்கர திரைப்படம் போல விரிகிறது. 

அவன் வளர்ந்ததும், என்னிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். தற்போது அவனுக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது. ஹீப்ரு தான் பேசுகிறான். எனவே ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்ட பிறகு என்னிடம் அந்த கேள்விகளைக் கேட்கலாம். ஆனால், அவனுக்கு நான் சில விஷயங்களை சொல்ல வேண்டும், அவரது தந்தை எப்படிப்பட்டவர், எவ்வளவு கணிவானவர், அனைத்தையும் பொறுமையாகக் கேட்பவர், என்னை ஒரு நாளும் கேள்வி கேட்டதேயில்லை என்பதையெல்லாம், அவரது தாய் அன்புள்ளம் கொண்டவர். மோஷி அவரைப் போல வளர வேண்டும் என்றே நினைக்கிறேன்.

ஒரே ஒரு முறை மோஷி என்னிடம் ஒரு கேள்வி கேட்டான், அதாவது, நாம் நாரிமன் இல்லத்தில் தங்கியிருந்தோம், ஆனால், என் தந்தையின் வீடு எது? என்றான், அதற்கு நான், நீயும் உன் பெற்றோரும் நாரிமன் இல்லத்தில் தான் வாழ்ந்து வந்தீர்கள் என்று விளக்கினேன். இப்போது தாத்தா பாட்டியுடன் ஒரு வீட்டில் வாழ்ந்து வருவதால் அவனுக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டது.

தாக்குதல் நடந்த இரண்டாம் நாளே இஸ்ரேல் நாட்டில் இருந்து எங்கள் இருவருக்கும் அழைப்பு வந்தது. குடியேற்ற உரிமையும் கிடைத்தது. ஆனாலும் நான் தற்போதும் இந்திய குடியுரிமையை வைத்திருக்கிறேன். எப்போதும் நான் இந்திய பிரஜைதான் என்கிறார் சிரித்தபடி.

எனக்கு இரண்டு மகன்கள், மார்டின் (34), ஜாக்சன்(26), இருவரும் இந்தியாவில் வசிக்கிறார்கள். ஆனால், அவர்களை விட மோஷியிடம்தான் எனக்கு மிகவும் நெருக்கம். என் பிள்ளைகளை விட, மோஷிதான் எனக்குப் பிரியமானவனாக இருக்கிறான் என்கிறார் 26/11 தாக்குதலுக்கு, 6 மாதத்துக்கு முன்பு தனது கணவரை இழந்த சாண்ட்ரா.

மோஷிக்கு என் துணை தேவைப்படும் வரை இங்கே தங்கியிருக்க நான் விரும்புகிறேன். இஸ்ரேலில் அவனுக்காகவே இருக்கிறேன். அவனுக்கு 10 வயதாகும் போது, நான் இந்தியா திரும்பலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், தற்போதும் அவனுக்கு என் அரவணைப்பு தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் என்னவாகும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவன் தனது பெற்றோரைப் போல நல்ல மனிதனாக வளர வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறேன் என்கிறார் சாண்ட்ரா.

பின்னணி: 
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சுத் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலின்போது, யூத மத அமைப்பினர் தங்கியிருந்த நாரிமன் இல்லத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர். இதில் அங்கிருந்த யூத மதகுரு கேவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் அவரது மனைவி ரிவிகா உள்பட 8 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

எனினும், கேவ்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் தம்பதியரின் 2 வயது மகன் மோஷி ஹோல்ட்ஸ்பெர்கை, அவனுக்கு செவிலித் தாயாக நியமிக்கப்பட்டிருந்த சாண்ட்ரா சாமுவேல் தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றினார்.

பயங்கரவாதிகள் நுழைந்தவுடன் ஓர் அறைக்குள் பதுங்கிக் கொண்ட சாண்ட்ரா, பல மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை மோஷியின் அழுகுரலையும், தனது பெயரைச் சொல்லி அவன் அழைப்பதையும் கேட்டார்.

அதனைத் தொடர்ந்து, தனது உயிரைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அறையை விட்டு வெளியே வந்த சாண்ட்ரா, மேல் தளத்துக்கு சென்று அங்கு அழுது கொண்டிருந்த மோஷியை நெஞ்சோடு அணைத்தவாறு அந்த வீட்டை விட்டு தப்பி வெளியே ஓடி வந்தார்.

நாரிமன் இல்லத்திலிருந்த ஏறத்தாழ அனைவரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நிலையில், சாண்ட்ராவின் துணிச்சல் காரணமாக அவரும், குழந்தை மோஷியும் உயிர் பிழைத்தனர்.

சாண்ட்ராவின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் அரசு அவருக்கு கெளரவக் குடியுரிமையும், இஸ்ரேலில் நிரந்தரமாகத் தங்குவதற்கான குடியேற்ற உரிமையும் வழங்கி கெளரவித்தது. தற்போது அவர் ஜெருசலேம் நகரில் பணியாற்றி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com