சவூதி கூட்டு நாடுகளின் நிபந்தனைகளை நிறைவேற்ற கத்தாருக்கு 2 நாள் கூடுதல் அவகாசம்

கத்தாருடன் மீண்டும் சர்வதேச உறவுகளை மேற்கொள்ள சவூதி கூட்டு நாடுகள் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்ற இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கத்தாருடன் மீண்டும் சர்வதேச உறவுகளை மேற்கொள்ள சவூதி கூட்டு நாடுகள் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்ற இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்து வரும் குவைத் இந்தத் தகவலை திங்கள்கிழமை வெளியிட்டது.
இஸ்லாமிய தேசம், அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு கத்தார் உதவி அளிப்பதாக சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின.
இதைத் தொடர்ந்து கத்தாருடனான சர்வதேச உறவுகளை முறித்துக் கொள்வதாக கடந்த ஜூன் 5-ஆம் தேதி அறிவித்தன. தங்களது வான் எல்லைப் பகுதிக்குள் கத்தாரின் விமானங்கள் பறக்கக் கூடாது, தங்களது நாட்டு கடல் எல்லைப் பகுதிகளில் கத்தார் கப்பல்கள் பிரவேசிக்கக் கூடாது என்று தெரிவித்தன.
கத்தாருடன் மீண்டும் சர்வதேச உறவுகளை மேற்கொள்ள 13 நிபந்தனைகளை சவூதி கூட்டு நாடுகள் விதித்தன.
ஈரானுடனான உறவுகளை கத்தார் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பது அதில் மிக முக்கியமானது. கத்தார் அரச குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனம் நடத்தி வரும் அல்-ஜஸீரா தொலைக்காட்சியை முடக்க வேண்டும், அந்த நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள துருக்கிப் படைகளை வெளியேற்ற வேண்டும், சவூதி கூட்டு நாடுகளுக்கு நஷ்ட ஈடாகப் பெரும் தொகை அளிக்க வேண்டும் உள்ளிட்ட 13 நிபந்தனைகளை நிறைவேற்ற 10 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் கத்தார் இந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்படுத்த குவைத் முயற்சி செய்து வந்தது.
சவூதி கூட்டு நாடுகளின் கெடு திங்கள்கிழமை முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது என்று குவைத் தெரிவித்தது.
நிபந்தனைகளை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் அளிக்கும் கடிதத்தை குவைத்திடம் கூட்டு நாடுகள் அளித்தன. புதன்கிழமைக்குள் கத்தார் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாக குவைத் தெரிவித்தது.
ஆனால் இதற்கு கத்தார் தரப்பிலிருந்து நேரடியான பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
'கத்தாரை அடக்கியாள முயற்சிக்கும் திட்டம் தோல்வி அடையும்' என்று அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் காலித் பின் முகமது அல்-அத்தியா, பிரிட்டன் ஸ்கை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கத்தாரிலிருந்து துருக்கிப் படைகளை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் திட்டவட்டமாக கூறினார்.
இதனிடையே, சவூதி கூட்டு நாடுகளின் நிபந்தனைகள் ஏற்க முடியாதவை என்றும், சர்வதேச சட்டங்களுக்கு முரண்பாடானவை என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இயற்கை எரிவாயு வளம் மிக்க நாடுகளில் முதலிடத்தில்
உள்ள கத்தார், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு ஏற்றுமதிகளையே நம்பியிருக்கிறது.
சவூதி கூட்டு நாடுகளின் நடவடிக்கையால் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ஈரான், துருக்கியிலிருந்து சரக்கு விமானம், கப்பல்கள் மூலம் கத்தாருக்கு உணவுப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com