தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அரசு உறுதி

இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.

இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.
இலங்கையில் அதிக எண்ணிக்கை கொண்ட சிறுபான்மையினராக தமிழர்கள் விளங்குகின்றனர். கல்வி, அரசு வேலைவாய்ப்பு, சலுகைகள் என அனைத்திலும் தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வந்ததன் காரணமாக அங்கு தனி ஈழம் கோரிக்கை வலுப்பெற்றது.
இந்தக் கோரிக்கையை முன்வைத்தே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் போராடி வந்தனர். எனினும், கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட போரில் விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தனர்.
இதையடுத்து, அங்குள்ள தமிழர்கள் மத்தியில் தனி ஈழம் கோரிக்கை வலுவிழக்க தொடங்கியது. ஆனால், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணம் மற்றும் இலங்கையின் கிழக்குப் பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
மேலும், தற்போதைய அதிபர் சிறீசேனாவும் தமது தேர்தல் வாக்குறுதியில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த 2015-ஆம் ஆண்டு தாம் அதிபராக பொறுப்பேற்றதும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் வகையிலான புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படும் என சிறீசேனா அறிவித்தார். அதிபரின் இந்த அறிவிப்பானது, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால், இந்த அறிவிப்பானது பெயரளவில் இருந்ததே தவிர செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அரசு மீது தமிழர்களுக்கும், தமிழ் அமைப்புகளும் அதிருப்தியில் இருந்தன.
இந்தச் சூழலில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், தன்னாட்சி அதிகாரம் வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தை இயற்றும் நடவடிக்கையும் முழுவீச்சில் தொடங்கியுள்ளதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சருமான ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளார்.
புத்த அமைப்புகள் எதிர்ப்பு: இந்நிலையில், அரசின் இந்த முடிவுக்கு இலங்கையில் உள்ள புத்த மதத் துறவிகளும், புத்த அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com