வழக்கமான கட்டிப்பிடிப்பு இல்லை: கைகுலுக்கலுடன் நின்றுவிட்ட மோடி - சீன அதிபருடனான சந்திப்பு

ஜி- 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார்.
வழக்கமான கட்டிப்பிடிப்பு இல்லை: கைகுலுக்கலுடன் நின்றுவிட்ட மோடி - சீன அதிபருடனான சந்திப்பு


ஹம்பர்க்: ஜி- 20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனியின் ஹாம்பர்க் நகருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இம்மாநாட்டில் பங்கேற்க வந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

வழக்கமாக ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வது வழக்கம். இந்திய - சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் வெறும் கைகுலுக்கலுடன் தங்களது வாழ்த்துகளை நிறுத்திக் கொண்டனர்.

சிக்கிம் விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் இரு தலைவர்களும் சந்தித்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் நீடித்து வந்த நிலையில், இரு தலைவர்களும் கைகுலுக்கி, விவாதம் நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, சமூக வலைதளமான டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'மோடியும், ஜின்பிங்கும் ஹாம்பர்க் நகரில் பிரிக்ஸ் தலைவர்களுக்கு சீனா அளித்த விருந்து நிகழ்ச்சியில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதம் நடத்தினர்' என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், இரு தலைவர்களும் என்னென்ன விவகாரங்கள் குறித்துப் பேசினர் என்ற விளக்கத்தை அவர் அளிக்கவில்லை. மோடியும் ஜின்பிங்கும் சந்தித்துக் கைகுலுக்கும் புகைப்படத்தையும் வெளியுறவுத்துறை அமைச்சகம், டுவிட்டரில் வெளியிட்டது.

முன்னதாக, மோடிக்கும், ஜின்பிங்கிற்கும் இடையே ஹாம்பர்க் நகரில் இருதரப்பு சந்திப்பு நடைபெறுவதற்கு சூழ்நிலை உகந்ததாக இல்லை என்று சீன அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியிருந்தார். அதற்கு மறுநாள் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com