மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: மோடி

தொழிலதிபர் விஜய் மல்லையா, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி போன்ற பொருளாதாரக் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைப்பதில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் தெரஸா மேவை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் தெரஸா மேவை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.

தொழிலதிபர் விஜய் மல்லையா, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி போன்ற பொருளாதாரக் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைப்பதில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் தெரெஸா மேவிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்தவில்லை. மேலும், வரி ஏய்ப்பு, பண மோசடி உள்ளிட்ட புகார்களும் அவர் மீது உள்ளன.
இதனிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டன் சென்ற அவர், கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக, அங்கேயே தங்கியுள்ளார். அவரை, இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், லண்டனில், கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டன் போலீஸாரால் மல்லையா கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடவுச் சீட்டை ஒப்படைப்பது, பயண ஆவணங்களை முடக்குவது, நாடு கடத்தும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு என நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளுக்கும் கட்டுப்படுவதாக உறுதியளித்து, அடுத்த சில மணி நேரத்தில், மல்லையா ஜாமீனில் வெளியே வந்தார்.
இதேபோல், பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கு லண்டனில் தங்கியுள்ளார். அவரையும், இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு இந்திய அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாட்டுக்குச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் தெரஸா மேவை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது, பொருளாதாரக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி வைப்பதில் பிரிட்டன் அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரஸா மேவிடம் மோடி வலியுறுத்தினார். இந்தத் தகவலை, சந்திப்பு முடிந்த பிறகு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், குறிப்பாக, மல்லையா அல்லது லலித் மோடி ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு தெரஸா மேவிடம் மோடி வலியுறுத்தினாரா? என்று பின்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மல்லையா தொடர்பான கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்த கோபால் பாக்லே, ""பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பதிவில், தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகள் என்று பன்மையிலேயே குறிப்பிட்டுள்ளார்'' என்று பதிலுரைத்தார்.
இந்தியா-பிரிட்டன் இடையே பரஸ்பரம் குற்றவாளிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம், கடந்த 1992-ஆம் ஆண்டு கையெழுத்தானது. இத்தனை ஆண்டுகளில், குஜராத் கலவரத்தில் தொடர்புடைய சமீர்பாய் வினுபாய் படேல் என்பவர் மட்டுமே பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

தலைவர்களுடன் மோடி சந்திப்பு
ஜி-20 மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் பவுலோ ஜென்டிலோனி, தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க், மற்றும் மெக்ஸிகோ, ஆர்ஜெண்டினா, வியத்நாம் நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

மாநாட்டில் டிரம்ப்பின் மகள்

ஜி-20 உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இருக்கையில் இருந்து வெளியே சென்றபோது, அந்த இருக்கையில், அவரது மகள் இவாங்கா அமர்ந்ததால் சர்ச்சை எழுந்தது.
சீனப் பிரதமர் ஜீ ஜின்பிங், துருக்கி அதிபர் எர்டோகன், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரமதர் தெரஸா மே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றக் கூட்டத்தில், இவாங்காவும் பங்கேற்றார். இந்தச் சம்பவம், வெள்ளை மாளிகையின் உயர் பதவிகளில், டிரம்ப் தனது குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, தகுதியற்ற ஒருவர், அந்த இருக்கையில் அமரக் கூடாது என்று வரலாற்று ஆசிரியர் அன்னி ஆப்பிள்பாம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com