எல்லையில் தாக்குதல்: இந்தியத் துணைத் தூதருக்கு பாகிஸ்தான் மீண்டும் சம்மன்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் நாட்டு எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, இந்தியத் துணைத் தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தங்கள் நாட்டு எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, இந்தியத் துணைத் தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாள்களாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் கிருஷ்ணஹத்தி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இயந்திரத் துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில், பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த 7 பேர் இதுவரை பலியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கான இந்தியத் துணைத் தூதர் ஜே.பி. சிங்கை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
அப்போது, பாகிஸ்தான் ராணுவம்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதாகவும், அதற்குப் பதிலடியாகவே இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ஜே.பி. சிங் தெரிவித்திருந்தார்.
மீண்டும் சம்மன்: இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் இந்தியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறி, இந்தியத் துணைத் தூதர் ஜே.பி. சிங்கை நேரில் ஆஜராகுமாறு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை (தெற்காசியா மற்றும் சார்க் விவகாரங்கள்) இயக்குநர் முகமது ஃபைஸல் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அழைப்பாணை அனுப்பினார்.
அதன்படி, இஸ்லாமாபாதில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் ஆஜராகிய கே.பி. சிங்கிடம் பாகிஸ்தான் சார்பில் முகமது ஃபைஸல் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இரு நாடுகள் இடையே 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய ராணுவம் மதித்து நடக்க வேண்டும் எனவும் ஜே.பி. சிங்கிடம் ஃபைஸல் வலியுறுத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com