ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி: இயற்கைக்கு ஆபத்து!

ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அங்கு இயற்கை சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி: இயற்கைக்கு ஆபத்து!

ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் எண்ணெய் கிணறு அமைக்க சமீபத்தில் அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் ஃபெடரல் ப்யூரோ ஆஃப் ஓஷன் எனர்ஜி மேனேஜ்மன்ட் தனது நிபந்தனையில்லா அதரவை அந்நாட்டின் உதவி பெரும் 'இ.என்.அய்' என்ற நிறுவனத்துக்கு அளித்துள்ளது.

இதனால், அந்நிறுவனமானது, ஆர்டிக் பனிப்பிரதேசத்தின் அலாஸ்காவில் சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் 4 எண்ணெய் கிணறுகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக, ஆர்டிக் கடல்பகுதிகளில் இதுபோன்று எண்ணெய் கிணறுகளை அமைக்க அப்போதைய பாரக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது.

இருப்பினும், தற்போதைய டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அந்தத் தடையை விலக்கியதோடு அவற்றுக்கு அனுமதியும் வழங்கியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்டன் மான்செல் கூறியதாவது:

அந்த எண்ணெய் நிறுவனத்தின் ஒப்பந்தம் நடப்பு ஆண்டின் இறுதிவரை உள்ளது. எனவே ஆர்டிக் கடல்பகுதியில் மேலும் 6 மைல் தூரம் வரையில் இந்த எண்ணெய் கிணறுகளை அமைக்க விரிவுபடுத்துகிறது.

இந்த எண்ணெய் கிணறுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு 21 நாட்கள் மட்டுமே டிரம்ப் அரசு கால அவகாசம் வழங்கியது. இதற்குள் ஆய்வு செய்ய வேண்டிய நெருக்கடிக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். 

இந்த எண்ணெய் கிணறு அமைக்கும் தடையை நீக்கி அதற்கு அவரச கதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் முரணான செயலாகும். இதனால் ஏற்கனவே ஆபத்து நிறைந்துள்ள இந்தப் பணியில், மேலும் ஆபத்தை உருவாக்கும். 

இந்த ஆர்டிக் பனிப்பிரதேசம் மற்றும் கடல்பகுதியில் மட்டும் அரிய வகை கரடி, திமிங்கலம் போன்ற பல்வேறு உயிரினங்கள் வசிக்கின்றன. இதன் அடிப்படை வாழ்வாதாரமே இங்குதான் உள்ளது. சற்று யோசித்து பாருங்கள், ஒரு சிறிய துளி எண்ணெய் இந்தப் பனியில் அல்லது கடலில் கலந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று.

அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெய் சிதறல்களை எந்தக் காலத்திலும் சுத்தப்படுத்தப்பட இயலாது. இதனால் இப்பகுதியின் இயற்கைச் சூழல் முற்றிலும் அழியும் ஆபத்து உள்ளது என்றார். 

உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பருவ நிலை மாற்றங்களும், அதனால் உண்டாகும் ஆபத்து குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்கும் நோக்கத்தோடு செயல்படுவேம் என்று டொனால்டு டிரம்ப் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com