குல்பூஷணுக்கு எதிரான ஆதாரங்கள்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆய்வு

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூஷண் ஜாதவின் கருணை மனு மீது முடிவெடுப்பதற்காக, அவருக்கு எதிரான ஆதாரங்களை அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி ஆய்வு செய்து வருவதாக தகவல்கள்

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்பூஷண் ஜாதவின் கருணை மனு மீது முடிவெடுப்பதற்காக, அவருக்கு எதிரான ஆதாரங்களை அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் உளவுப் பணியில் ஈடுபட்டதாக முன்னாள் இந்தியக் கடற்படை வீரரான குல்பூஷண் ஜாதவை அந்நாட்டு ராணுவத்தினர் கடந்த ஆண்டு கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் ராணுவம், அவருக்கு கடந்த மார்ச் மாதம் தூக்கு தண்டனை விதித்தது. இது, இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, குல்பூஷண் ஜாதவ் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியது.
மேலும், அவருக்கு இந்தியத் தூதரகத்தின் சட்ட உதவிகளை கிடைக்கச் செய்யுமாறு பாகிஸ்தான் அரசிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது. ஆனால், இந்தியாவின் இந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்துக்கு இந்தியா கொண்டு சென்றது. இந்தியாவின் மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைத்தது.
இதனிடையே, தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை
ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஜாவேத் பாஜ்வாவிடம் குல்பூஷண் ஜாதவ் சார்பில் கடந்த மாதம் கருணை மனு அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஜாதவின் இந்தக் கருணை மனு மீது முடிவெடுப்பதற்காக அவருக்கு எதிரான ஆதாரங்களை பாஜ்வா ஆய்வு செய்து வருவதாக பாகிஸ்தான் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஆசிஃப் கபூர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுக்குப் பின்னரே, அவரது கருணை மனு மீது இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com