பாகிஸ்தான்: கூட்டு விசாரணைக் குழு அறிக்கையை நிராகரிக்க உச்ச நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் வலியுறுத்தல்

ஊழல் புகார் தொடர்பாக நியமிக்கப்பட்ட கூட்டு விசாரணைக் குழு தாக்கல் செய்த இறுதி அறிக்கையை நிராகரிக்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தரப்பு
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகன் ஹுசேன் நவாஸ் (கோப்புப் படம்).
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகன் ஹுசேன் நவாஸ் (கோப்புப் படம்).

ஊழல் புகார் தொடர்பாக நியமிக்கப்பட்ட கூட்டு விசாரணைக் குழு தாக்கல் செய்த இறுதி அறிக்கையை நிராகரிக்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தரப்பு வலியுறுத்தியது.
பனாமா ஆவணங்கள் கசிவைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் மீது ஊழல் புகார் எழுப்பப்பட்டது. அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சியினர் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த உச்சி நீதிமன்றம், வெளிநாட்டு சொத்துகள் குறித்து விசாரிக்க கூட்டு விசாரணைக் குழுவை அமைத்தது. நவாஸ் ஷெரீஃப், அவரது குடும்பத்தினர் உள்பட பல்வேறு நபர்களிடமும், வெளிநாடுகளிலும் விசாரணை நடத்திய அந்தக் குழு, அதன் இறுதி அறிக்கையை கடந்த ஜூலை 10-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
பத்து தொகுதிகளாக அளிக்கப்பட்ட அறிக்கையின் 9 தொகுதிகளின் நகல், விசாரணைக்கு உள்ளான நபர்கள் பதிலளிப்பதற்கு உதவும் வகையில் அளிக்கப்பட்டன. கூட்டு விசாரணைக் குழுவின் வேண்டுகோளின்படி, 10-ஆவது தொகுதி சீல் வைக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற விசாரணை திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது. அப்போது நவாஸ் ஷெரீஃப் சார்பில் ஆஜரான காஜா ஹாரிஸ் வாதிட்டது:
கூட்டு விசாரணைக் குழு அறிக்கை சட்டத்துக்குப் புறம்பானது மட்டுமல்ல, பாகிஸ்தான் அரசியல் சாசனத்துக்கே எதிரானதாகும். எனவே அந்த அறிக்கையில் உள்ள விவரங்களுக்கு நாட்டின் சட்டங்களின் கீழ் எந்த மதிப்பும் கிடையாது. அந்தக் குழு பல வெளிநாட்டு அரசுகளுடன் தொடர்பு கொண்டு சில ஆவணங்களைப் பெற்றுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுவும் சட்டத்துக்குப் புறம்பானது.
நாட்டின் உன்னத நீதி பீடம் விசாரித்து முடித்த வைத்த பல வழக்குகளை மறு விசாரணை செய்ய வேண்டும் என்று கூட்டுக் குழு தெரிவித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. இது விசாரணைக் குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
முற்றிலும் ஒருதலைப்பட்சமாக கூட்டு விசாரணைக் குழு நடந்து கொண்டுள்ளது. பத்து தொகுதிகளாக அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அந்தக் குழு தாக்கல் செய்துள்ளது. ஆனால், பத்தாவது தொகுதி தனியாக சீல் வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை ரகசியமாக வைத்திருக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் அந்த விசாரணைக் குழு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தப் பத்தாவது தொகுதியிலுள்ள விவரங்களை உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும். ஒருதலைப்பட்சமான அந்த விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நவாஸ் ஷெரீஃப் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி சார்பில் வாதிட்ட நயீம் புகாரி கூறினார்.
பின்னணி: பனாமா ஆவணங்கள் கசிவின் மூலம், நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு லண்டனில் குடியிருப்புகள், வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருப்பதாகத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவி நீக்கம் செய்யுமாறு இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்குப் போதுமான ஆதாரம் இல்லையெனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மேலும் விசாரிக்க, அந்நாட்டு ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையம், ராணுவ உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உள்ளிட்ட 6 உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குழுவை அமைத்தது.
நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம், இரு மகன்கள், பிரதமரின் தம்பியும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோரிடம் கூட்டு விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் பெயரில் உள்ள குடியிருப்புகளை வாங்கப் பணம் அளித்ததாக கத்தார் இளவரசர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணை முடிந்ததும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் மூத்த தலைவர் ஃபவத் செளத்ரி செய்தியாளர்களிடம் கூறியது: சட்டத்தின் அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும் ஆட்சிபுரிவதற்கான தகுதியை நவாஸ் ஷெரீஃப் இழந்துவிட்டார். அவர் பதவி பறி போவது நிச்சயம். அவர் சிறைக்குப் போவதும் நிச்சயம் என்றார்.
இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com