'விண்வெளி துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும்'

விண்வெளி, கணினி பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திடம் செனட் அவை குழு வலியுறுத்தியுள்ளது.

விண்வெளி, கணினி பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திடம் செனட் அவை குழு வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் (மேலவை) செல்வாக்கு மிகுந்த குழுவாக கருதப்படும் பாதுகாப்புப் படைகளுக்கான குழு, செனட் அவையிடம் 600 பக்கங்களைக் கொண்ட ஓர் அறிக்கையை அளித்துள்ளது. அந்த அறிக்கையானது, செனட் சபையில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு அதிகாரச் சட்டம் என்னும் பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார சக்தியாகவும், முக்கிய பாதுகாப்பு கூட்டாளியாகவும் திகழும் இந்தியாவுக்கு, அமெரிக்காவின் முக்கிய நட்புநாடுகள், கூட்டாளி நாடுகளுள் ஒன்றாக இடம்பெறும் தகுதி இருப்பதாக குழு கருதுகிறது. அமெரிக்காவை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பாதை என்று பார்த்தோமானால், இந்தியாவுடன் முக்கிய பாதுகாப்பு நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், கணினி பாதுகாப்பு, விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியாவுடன் மிகவும் நெருங்கி ஒத்துழைப்பை அமெரிக்கா ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆண்டுதோறும் மலபார் ஒத்திகை என்ற பெயரில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்தும் கடற்படை ஒத்திகையை தொடர வேண்டும். இந்த ஒத்திகையில், ஜப்பானும் தற்போது இணைந்திருப்பது மேலும் பயனைத் தந்துள்ளது. நிகழாண்டுக்கான மலபார் ஒத்திகையானது, இந்த மாதம் (ஜூலை) 7-ஆம் தேதி முடிவடைந்தது. இந்த ஒத்திகையில், கடலோர பாதுகாப்பு, மீட்புப் பணிகள், தாக்குதலுக்கு வரும் நீர்மூழ்கி கப்பல்களை தேடிக் கண்டுபிடித்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்குகளை எட்டுவதில் இடைவெளி ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. இந்த இடைவெளியை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. செனட் சபையின் பாதுகாப்பு படைகளுக்கான குழுவின் தலைவராக ஜான் மெக்கெய்ன் உள்ளார். இந்தக் குழுவானது, அமெரிக்காவின் தேசிய, பாதுகாப்பு தொடர்பான கொள்கையை வகுக்கும் பணியில் முக்கியப் பங்கை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com