மிக்-35 புதிய ரக போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்க ரஷியா ஆர்வம்

நான்காம் தலைமுறை போர் விமானத்தைக் காட்டிலும், தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாக கருதப்படும் மிக்-35 ரக புதிய போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு ரஷியா ஆர்வம் தெரிவித்துள்ளது.
மிக்-35 புதிய ரக போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்க ரஷியா ஆர்வம்

நான்காம் தலைமுறை போர் விமானத்தைக் காட்டிலும், தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாக கருதப்படும் மிக்-35 ரக புதிய போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு ரஷியா ஆர்வம் தெரிவித்துள்ளது.

ரஷியாவின் சுகோவ்ஸ்கி நகரில் சர்வதேச விமானக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட மிக் நிறுவனத்தின் (மிக் போர் விமானத் தயாரிப்பு நிறுவனம்) டைரக்டர் ஜெனரல் இலியா டேராசென்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான எஃப்-35-ஐ காட்டிலும், மிக்-35 ரக போர் விமானம் மிகச் சிறந்தது ஆகும். வான்பகுதியில் சண்டை நடக்கும்பட்சத்தில், எஃப்-35 விமானமானது, மிக்-35 ரக போர் விமானத்தால் தோற்கடிக்கப்படும்.
போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக இந்திய அரசால் விடப்படும் ஒப்பந்தப்புள்ளிகளில் (டெண்டர்கள்), மிக்-35 ரக போர் விமானத்தை விற்பது தொடர்பான திட்டத்தை வைக்க முடிவு செய்துள்ளோம். அந்த ஒப்பந்தப்புள்ளியை பெறுவது தொடர்பாக இந்திய விமானப் படையுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம் என்றார் அவர்.
மிக்-29கே, மிக்-29எம் ரக போர் விமானங்கள் வரிசையில், மிக்-35 ரக போர் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. ரஷியாவால் உருவாக்கப்பட்ட போர் விமானங்களில் மிகவும் நவீன போர் விமானமாக இது கருதப்படுகிறது. பல்நோக்கு பயன்பாடுகளைக் கொண்ட இந்த போர் விமானம், 4-ஆவது தலைமுறை போர் விமானத்தைக் காட்டிலும் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டது ஆகும்.
இந்த போர் விமானத்தை வாங்குவதற்கு இந்தியத் தரப்பில் விருப்பம் காட்டப்படுகிறதா? என்று டேராசென்கோவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "ஆமாம், அவர்கள் விருப்பம் காட்டுகின்றனர்' என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்திய விமானப் படையால் மிக் ரக போர் விமானம் கடந்த 50 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ரஷியாவால் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மிக் ரக போர் விமானம் விற்பனை செய்யப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது.
இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை: மிக்-35 ரக போர் விமானத்தை விற்பனை செய்யும் விவகாரத்தில், இந்தியாவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதாவது, இந்தியாவுக்கு அந்த போர் விமானத்தில் செய்து தர வேண்டிய தொழில்நுட்ப வசதி, தொழில்நுட்ப விவரக் குறியீடுகள் தொடர்பாகவும், இந்தியாவுக்கு தேவைப்படும் போர் விமானங்களின் எண்ணிக்கை குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
போர் விமானத்தை விற்பனை செய்வது மட்டுமல்லாமல், அதை செலுத்துவதற்குரிய பயிற்சி, விற்பனைக்குப் பிந்தைய 40 ஆண்டுகாலத்துக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதே ரகத்தைச் சேர்ந்த விமானத்தை தயாரிக்கும் பிற நிறுவனங்கள் தெரிவிக்கும் விலையுடன், இந்த விமானத்தின் விலையை ஒப்பிட்டால், இதன்விலை 20 முதல் 25 சதவீதம் குறைவாகும். அதேபோல், தொழில்நுட்பத்தில் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்துக்கு இணையான விமானம் இதுவாகும். முழுக்க முழுக்க ரஷிய நிறுவனங்கள்தான் இந்த விமானத்தை உருவாக்கியுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com