தமிழக விவசாயிகளின் உயிர்காக்க, நீர்நிலைகளை மீட்க 'மொய் விருந்து' வைத்து அசத்திய அமெரிக்கா வாழ் தமிழர்கள்!

தமிழகத்தில் வறட்சி மற்றும் விவசாயக் கடனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காக்கவும், நீர்நிலைகளை மீட்டு உதவிடும் வகையில்
தமிழக விவசாயிகளின் உயிர்காக்க, நீர்நிலைகளை மீட்க 'மொய் விருந்து' வைத்து அசத்திய அமெரிக்கா வாழ் தமிழர்கள்!


வாஷிங்டன்: தமிழகத்தில் வறட்சி மற்றும் விவசாயக் கடனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காக்கவும், நீர்நிலைகளை மீட்டு உதவிடும் வகையில் அமெரிக்க வாழ் தமிழர்கள் வாஷிங்டனில் மொய் விருந்து நடத்தி அசத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கடன் உள்ளிட்ட பொருளாதார பிரச்னைகள் போன்ற துயரங்களுக்கு ஆளாகி அவதிபடுபவர்களுக்கு உதவுவதற்காக விவசாய பெருங்குடி மக்களால் ஏற்படுத்தப்பட்ட வழக்கம் தான் 'மொய் விருந்து'. அதாவது யார் ஒருவர் கடனால், பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ளாரோ அவர் தனது ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து விருந்து வைப்பார். விருந்து முடிந்த பின்பு, விருந்து விழாவில் கலந்துகொண்டவர்கள் தங்களால் முடிந்த பண உதவியை உணவு அருந்திய இலையின் கீழ் வைத்துவிட்டு செல்வார்கள்.

பருவமழை பொய்த்து போனதால் ஆறுகள், குளங்கள், ஏரிகள், அணைகள் அனைத்தும் வறண்டு விட்டன. நிலத்தடி நீர்மட்டமும் பாதாளத்திற்கு சென்று வறண்டுபோனது. இதனால் விவசாயம் தலைதூக்க முடியாமல் வானம் பார்த்த பூமி, தற்போது வறட்சி பூமியாக மாறிபோனது. விவசாயத்திற்கு பயன்தரக்கூடிய நீர் ஆதார வளங்களைப் பயன்படுத்தக்கூடிய ஆறுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகள், குளங்களைப் பாதுகாப்பதில் நாம் தோல்வியடைந்ததன் காரணமாக தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து விவசாயிகளை பாதுகாக்கவும், நீர் ஆதார வளங்களான ஏரி, குளங்களை மீட்டெடுத்து சுத்தம் செய்தல், தூர் வாரி நீர் நிலைகளை வளப்படுத்துவதற்காக புனரமைப்பு பணிகளை செய்து பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் தண்ணீரை சேமித்து மீண்டும் விவசாயத்தை காப்பதற்காகவும் அனைவரிடமும் விழிப்புணர்வை கொண்டு வரவும், இந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்க நிதித் திட்டத்தை தொடங்குவதற்கு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். இந்திய மக்களிடையே விழிப்புணர்வை பரப்புவதற்கான வாய்ப்பாக 'எய்ம்ஸ் இந்தியா' என்ற அமைப்பு இதை எடுத்துக் கொண்டது.

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளில் தங்கி உள்ள தொப்புள் கொடி உறவுகள் விவசாயிகளை காக்கவும், நீர்நிலைகளை மீட்டு உதவிடும் வகையில் கரம்கோர்க்க முன்வந்து இந்த செயலில் இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வித்தியாசமான 'மொய் விருந்து' நிகழ்ச்சியை தமிழக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது.

இந்த மொய் விருந்து நிகழ்ச்சியை 'எய்ம்ஸ் இந்தியா' என்ற அமைப்பு சனிக்கிழமை நடத்தியுள்ளது. இந்த எண்ணத்தை அமெரிக்க தமிழ் சங்கம் மற்றும் அங்குள்ள தமிழ் பள்ளிகள் தான் ஆரம்பத்தில் முன்வைத்தன.

இந்த மொய் விருந்தின் மூலம் கிடைத்த நிதியை தமிழகத்தின் நீர்நிலைகளை மீட்டெடுக்கவும், விவசாயத்தையும், விவசாயிகளை காக்கவும் பயன்படுத்த திட்டமிட்டு வாஷிங்டனில் நடத்தி இருக்கிறது.

வெறுமனே மொய் விருந்து நிகழ்ச்சியை நடத்துவதை விட, தமிழ் கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சிகளையும் நடத்த ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி, பரதநாட்டியம், கிராமிய நடனங்கள், உரியடி, பல்லாங்குழி, பம்பரம், தாயம், கபடி, ஆடுபுலி ஆட்டம்,

கோலிக்குண்டு, கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம், பாண்டி, இசை நாற்காலி போன்ற நாட்டுப்புற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. வாழை இழையுடன் கூடிய பாரம்பரிய சைவ-அசைவ உணவு வகைகள், சிறுதானிய உணவுகள் மொய் விருந்தில் இடம்பெற்றன.

இந்த நிகழ்ச்சி குறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே, தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்காக அமெரிக்காவில் சில பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளோம். குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை பெருமளவில் நடத்தி உள்ளோம்.

இந்நிலையில், தமிழக விவசாயிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து நாங்கள் மிகவும் வேதனை அடைந்தோம். அதிலிருந்து விவசாயிகளை மீட்டெடுத்து அவர்களது நல்வாழ்விற்காக இந்த மொய் விருந்தை நடத்தியுள்ளோம் என கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்காக வாஷிங்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டார தமிழர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அழைப்புக்கான பதிவை ஏற்பட்டாளர்கள் அனுப்பினர். 1200 பேர் எங்களுடைய அழைப்பை ஏற்று http://aimsindia.net இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை தமிழ் கலாச்சாரம், உணவு, பண்பாடு ஆகியவற்றை இளம் தலைமுறையினருக்கு தெரியப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக கருதினோம். பின்னணி பாடகர் தேவன் ஏகாம்பரம் இந்த நிகழ்ச்சியில் பாடியது சிறப்பாக அமைந்தது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதி 'எய்ம்ஸ் இந்தியா' அமைப்பின் மூலம் கடலூர், திருநெல்வேலி, கோவை, அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் முதுகெலும்பான நீர் நிலைகளை மீட்க பயன்படுத்தப்பட உள்ளோம். இந்த மொய் விருந்தின் மூலம் ரூ.58.7 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக கூறினார். விவசாயிகளின் மகத்துவத்தை அனைவரும் உணரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறோம்  என்று கூறினார்.

மேலும் தகவல்கள் அறிந்துகொள்ளவும், நிகழ்சியில் பங்குகொள்ள நினைக்கும் தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்டவர்கள் www.dcmoivirunthu.org என்ற இணையதள முகவரிக்குச் சென்று தெரிந்துகொள்ளவும்.

எய்ம்ஸ் இந்தியா அறக்கட்டளை, 501 (c) (3) வரி விலக்கு அமைப்பானது. நீர் ஆதாரங்களை புத்துயிர் அளிப்பதில் ஈடுபட்டுள்ளதுடன் தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு நீண்டகால தீர்வுகளை வழங்கும். அத்தகைய திட்டங்களை தொடர்ந்து செய்வதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ளது.

மக்களை ஒன்றுபடுத்துவது எங்கள் நோக்குடன், எங்கள் அறக்கட்டளையில் வருபவர்கள் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் எதிர்கால சந்ததியையும் பாதுகாக்க முடியும் என "எய்ம்ஸ் இந்தியா" தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் இந்தியா அமைப்பின் சார்பில் திரட்டப்படும் நிதிகளை கொண்டு எங்கெல்லாம் நீர்நிலைகளை பாதுகாக்கிறார்கள் என்பது குறித்து அவர்களுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

அதன் விவரம்:
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மருதூர் கீழக்கல் கல்வாய் பிட்டர்குளம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. தொள்ளப்பள்ளி, செந்திலம்பண்ணை மற்றும் பத்மநாபமங்கலம் ஆகியவற்றிற்கான நீரின் ஆதாரமாக பிட்டர்குளம் உள்ளது.
ஏரியின் பரப்பளவு: 250 ஏக்கர்
முதல்கட்டமாக மீட்டமைப்பதற்கான திட்டம்: 100 ஏக்கர்
பாசன பரப்பளவு ஏறத்தாழ 1000 ஏக்கர்
பயனடையும் கிராமங்கள்: 06
பயனடையும் குடும்பங்கள்: 800
மருதூர் கீழக்கல் கல்வாயின் 15 நீர்நிலைகளையும் மீட்டெடுப்பது எங்கள் நோக்கம். அதற்கு அனைத்து தரப்பினரும்  எங்களுக்கு உதவ வேண்டும்.

* வீராணம் ஏரி, அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள நீர்நிலைகள், தஞ்சை ஏரி தூர்வாரும் பணி (ஆட்சியரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது)

விவசாயிகள் மற்றும் வருங்கால தலைமுறையினரின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாஷிங்டனின் நடந்த இந்த மொய் விருந்து நிகழ்ச்சி, தமிழக மக்கள் மத்தியில் விவசாயிகளுக்காக உதவ வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அண்ணா பல்கலைக் கழகத்தின், திருநெல்வேலி கிளையின் மூலம் இந்த திட்டம் முன்னெடுத்து நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலைகழகத்துடன் தமிழக பொதுப்பணித்துறை, விவசாயிகள் சங்கம் மற்றும் என்எஸ்எஸ், என்சிசி அமைப்பினரும் இந்த திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com