காபூல் குண்டு வெடிப்பில் 90 பேர் பலி  350 பேர் காயம்: பயங்கரவாதிகள் வெறிசெயல்

ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை குண்டு வெடிப்பால் சூழ்ந்துள்ள புகை மண்டலம்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை குண்டு வெடிப்பால் சூழ்ந்துள்ள புகை மண்டலம்.

ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அதிபர் மாளிகை, வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள ஜன்பாக் சதுக்கத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்ட பரபரப்பான காலைப் பொழுதில் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தில் வந்த தற்கொலைப் படைத் தீவிரவாதிகள், அந்நாட்டின் உளவு அமைப்பின் தலைமையகம் எதிரே இந்தக் குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் பல நூறு மீட்டர் தொலைவுக்கு புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது. சாலைகளில் வாகனங்கள் சிதறிக் கிடந்தன. காயமடைந்தவர்கள் உதவிகேட்டு கூக்குரலிட்டனர். மக்கள், வீட்டில் இருந்து வெளியே வந்த தங்களது உறவினர்களைத் தேடி அலைந்தனர். அந்தப் பகுதி முழுவதும் மரண ஓலம் கேட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குண்டு வெடிப்பில் ஏற்பட்ட தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடினர்.
90 பேர் பலி: இந்தக் குண்டு வெடிப்புக்கு பெண்கள், சிறார்கள் உள்பட 90 பேர் உயிரிழந்து விட்டனர் என்றும், 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஆப்கானிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வஹீத் மேஜ்ரோ கூறினார். சம்பவ இடத்தில் இருந்து மேலும் பல உடல்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
தூதரகக் கட்டடங்கள் சேதம்: குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள ஜெர்மன் தூதரகக் கட்டம், சீன தூதரகக் கட்டடம் ஆகியவை சேதமடைந்தன. இதேபோல், குண்டு வெடிப்பு காரணமாக ஏற்பட்ட அதிர்வால் பல நூறு மீட்டர் தொலைவுக்கு உள்ள கட்டடங்கள், வீடுகள் ஆகியவற்றின் ஜன்னல்கள் சேதமடைந்தன.

குண்டு வெடிப்பில் காயமடைந்த ஒருவரைத் தாங்கிப் பிடித்து அழைத்துச் செல்லும் மீட்புப் படை வீரர்.
குண்டு வெடிப்பில் காயமடைந்த ஒருவரைத் தாங்கிப் பிடித்து அழைத்துச் செல்லும் மீட்புப் படை வீரர்.

இந்தியத் தூதரக ஊழியர்கள் தப்பினர்
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தியத் தூதரகக் கட்டமும் லேசாக சேதமடைந்தது. எனினும், தூதரக அதிகாரிகளும், ஊழியர்களும், காவலர்களும் பத்திரமாக இருப்பதாக அங்குள்ள இந்தியத் தூதர் மன்பிரீத் வோரா கூறினார்.
இதுகுறித்து தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''கடவுளின் அருளால், இந்தியத் தூதரகத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மூடத்தனமான வன்முறை: பிரணாப் முகர்ஜி
ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனிக்கு பிரணாப் முகர்ஜி புதன்கிழமை அனுப்பிய செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தக் கோழைத்தனமான செயலை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது. இந்தச் சூழலில், ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனிக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று இந்திய அரசும், இந்திய மக்களும் வேண்டிக் கொள்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்றும், அங்குள்ள மக்கள் வாழ்வில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம் என்று பிரணாப் முகர்ஜி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி கண்டனம்
காபூல் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: காபூலில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டுத் தாக்குதலை இந்தியா கடுமையாகக் கண்டிக்கிறது. இந்தத் தாக்குதலில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.
ஆப்கானிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், அந்நாட்டுக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்று மோடி தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் கண்டனம்
காபூல் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்பதால், ஆப்கானிஸ்தான் மக்களின் வலியையும், வேதனையும் பாகிஸ்தானால் புரிந்துகொள்ள முடிகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி ஓட்டுநர் பலி
இந்தக் குண்டு வெடிப்பில் பிபிசி செய்தி நிறுவனத்தின் ஓட்டுநர் முகமது நஸீர் உயிரிழந்துவிட்டதாகவும், செய்தியாளர்கள் 4 பேர் காயமடைந்திருப்பதாகவும், அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலிபான் சதி?
இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்தப் பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், தலிபான் தீவிரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com