சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தை கைவிடுவதாக டிரம்ப் அதிரடி அறிவிப்பு

புவி வெப்பமயமாதல், அதன் காரணமாக ஏற்படும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் மேற்கொண்ட பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தை கைவிடுவதாக டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்: புவி வெப்பமயமாதல், அதன் காரணமாக ஏற்படும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் மேற்கொண்ட பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

பூமியின் வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முன்னர் இருந்ததைவிட 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்துவதற்காக, உலக நாடுகள் பாரீஸ் நகரில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன. நிகராகுவா, சிரியா தவிர உலகின் 195 நாடுகள் கையெழுத்திட்டன.

அந்த ஒப்பந்தத்தில், வெப்பமயமாதலைக் குறைக்க, தங்கள் தொழிற்சாலைகள், மின் உற்பத்தியகங்கள் முதலானவை வெளியிடும் கரியமில மாசுபாட்டை 26 சதவீதம் குறைப்பதாக அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, சுற்றுச்சூழல் ஒப்பந்தம் காரணமாக அமெரிக்க தொழிற்துறை மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகப் போவதாகவும் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

மேலும், உலக வெப்பமயமாதல் என்பதே வெறும் வதந்தி என்றும் அவர் கூறி வருகிறார்.

இந்தச் சூழலில், இத்தாலியில் கடந்த வாரம் நடைபெற்ற ஜி7 நாடுகள் மாநாட்டின்போது, பாரீஸ் ஒப்பந்தத்தைவிட்டு விலக வேண்டாம் என்று ஐரோப்பிய நாடுகள் டிரம்ப்புக்கு நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், டிரம்ப் வெளியிட்ட சுட்டுரை (டுவிட்டர்) பதிவில், ''பாரீஸ் ஒப்பந்தம் குறித்த எனது முடிவை வியாழக்கிழமை இரவு (இந்திய நேரப்படி ஜூன் 2) அறிவிப்பேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அந்த ஒப்பந்தத்திலிருந்து விலக டிரம்ப் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டதாகவும், இதுகுறித்து உலகத் தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்காவின் 'ஆக்ஸிஸ்' மற்றும் 'சிபிஎஸ்' ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், அமெரிக்க பொருளாதாரத்தை சீரழித்துவிடும் எனக் கூறி, பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தம் நியாயம் செய்யவில்லை என்றும் அது மிகப்பெரிய நிதிச்சுமையாக மாறியிருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

பசுமைத்திட்டங்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றும் அமெரிக்கர்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக அமெரிக்காவில் பல லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாகவும், பாரீஸ் ஒப்பந்தத்தை விட தமக்கு அமெரிக்கா முக்கியம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பருவ நிலை ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மீது குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், பில்லியன் கணக்கில் வெளிநாட்டு நிதியை இந்தியா பெற்று இந்த ஒப்பந்தத்தில் பங்கு பெற்றுள்ளதாகவும், கூடுதலாக நூற்றுக்கணக்கான நிலக்கரி சுரங்கங்களை கட்ட சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்தியாவும் சீனாவும் தனது நிலக்கரி சுரங்கங்களை 2020ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் இரு நாடுகள் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்ததற்கு, பிரான்ஸ் அதிபர் மக்ரான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

உலகத்திலேயே அதிக அளவு கரியமில வாயுவை உமிழும் தேசங்கள் சீனாவும் அமெரிக்காவும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com