தீவிரவாதத்திற்கு ஆதரவா? கத்தாருடன் தூதரக உறவுகளைத் துண்டித்த நான்கு இஸ்லாமிய நாடுகள்!

மேற்கு ஆசியாவின் முக்கியமான இஸ்லாமிய நாடான கத்தார், தொடர்ந்து தீவிரவாத செயல்களுக்கு ஆதரவும் நிதியுதவியும் அளித்து வருவதாக குற்றம் சாட்டி...
தீவிரவாதத்திற்கு ஆதரவா? கத்தாருடன் தூதரக உறவுகளைத் துண்டித்த நான்கு இஸ்லாமிய நாடுகள்!

கெய்ரோ: மேற்கு ஆசியாவின் முக்கியமான இஸ்லாமிய நாடான கத்தார், தொடர்ந்து தீவிரவாத செயல்களுக்கு ஆதரவும் நிதியுதவியும் அளித்து வருவதாக குற்றம் சாட்டி, எகிப்து, சவூதி அரேபியா உள்ளிட்ட நான்கு இஸ்லாமிய நாடுகள் கத்தாருடனான தூதரக உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளன    

மேற்கு ஆசியாவின் முக்கிய வளைகுடா நாடான கத்தார், தீவிரவாத எண்ணத்துடன் செயல்பட்டு வரும் அடிப்படைவாத இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவளித்து வருகிறது. கணிசமான அளவு நிதியுதவியும் அந்நாட்டினால் செய்யப்படுகிறது. இதன்மூலம் தீவிரவாதத்தை அந்நாடு ஊக்குவிக்கிறது என்று தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில் கத்தாரின் இத்தகைய நடவடிக்கைகளை கண்டித்து, அந்நாட்டுடனான தூதரக உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக, சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக ஏமனில் ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக நடந்து வரும் போரில் இருந்து கத்தார் படைகள் விடுவிக்கப்படும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அத்துடன் மேற்குறிப்பிட்ட நான்கு நாடுகளும் கத்தாருடனான ஆகாய மற்றும் கடல் வழி போக்குவரத்தையம் நிறுத்திக் கொள்ளுமென்று தெரிகிறது. இந்த முடிவு கத்தார் நாட்டின் பிரதான விமான சேவை நிறுவனமான கத்தார் ஏர்வேஸ்  நிறுவனத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியவில்லை.

அடிப்படைவாத எண்ணத்துடன் செயல்படும் தீவிரவாதிகளின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பஹ்ரைனில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் ஈரானியக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிக்கிறது என்று பஹ்ரைன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்பாராத நடவடிக்கையாக மற்றொரு இஸ்லாமிய நாடான அபுதாபியின் அரசு சார்பாக செயல்படும்  'எடிஹாட்' விமான நிறுவனமானது, கத்தார் நாட்டுக்கான தனது சேவையைத் துண்டித்துள்ளது. மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை முதல் அபுதாபியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்குச் செல்லும் எல்லா விமான சேவைகளும் நிறுத்தப்படுகிறது என்று எடிஹாட் நிறுவனம் அறிவித்துள்ளது.

முக்கியமான இந்த நான்கு இஸ்லாமிய நாடுகளின் அதிரடி முடிவு குறித்துக் கருத்துச் சொல்ல கத்தார் அரசு அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com