முஸ்லிம்கள் குடியேற்றத் தடை உத்தரவு: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அரசு முறையீடு

முஸ்லிகள் பெரும்பான்மையாக உள்ள 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி அந்நாட்டு
முஸ்லிம்கள் குடியேற்றத் தடை உத்தரவு: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அரசு முறையீடு

முஸ்லிகள் பெரும்பான்மையாக உள்ள 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, யேமன் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவதற்கான விசா வழங்குதலை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கவும், சிரியாவிலிருந்து அகதிகளை ஏற்பதை காலவரையறை இன்றி தடை செய்தும் டிரம்ப் ஆணை பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவுக்கு விர்ஜினியா மாகாணம், ரிச்மண்டில் உள்ள 5 மாகாணங்களுக்கான மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் அரசு மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அதிபரின் உத்தரவை மட்டும் கருத்தில் கொண்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு தனது மனுவில் அரசு குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு ஆதரவும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடமும் அளிக்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரத் திட்டமிடுபவர்களைக் கடுமையான சோதனைக்குப் பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கூற அதிபருக்கு அதிகாரம் உண்டு என்று நீதித் துறை செய்தித் தொடர்பாளர் சாரா இஸ்குர் ஃபுளோரஸ் தெரிவித்தார்.
அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ் கூறியது: "பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள 6 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அதிபரின் ஆணை பொருந்தும். ஆணையில் எங்கும் முஸ்லிம் மதத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே அந்த ஆணை முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. ஆணையில் குறிப்பிட்ட நாடுகளைத் தவிர வேறு பல நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அங்கிருந்து அமெரிக்கா வருவோருக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. மிகச் சிறிய அளவிலான மக்கள்தான் உத்தரவால் பாதிக்கப்படுவார்கள்.
குறிப்பிட்ட நாடுகளிலிருந்து குடியேற்றம் பெற விரும்புபவர்கள் குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ள கூடுதல் அவகாசத்தைப் பெறும் விதமாகத்தான் இடைக்காலத் தடை ஏற்படுத்தப்பட்டது. எந்தக் குழுவினரும் அமெரிக்காவில் குடியேறுவதை நிரந்தரமாகத் தடை செய்யவில்லை என்றார் அவர்.
உச்ச நீதிமன்றத்தில் உள்ள 9 நீதிபதிகளில் 5 பேர் குடியரசுக் கட்சி அதிபர்களால் நியமிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில், அங்கு பெரும்பான்மை தீர்ப்பு டிரம்ப்புக்கு ஆதரவாக இருக்கும் என நம்பப்படுகிறது.


பாதுகாப்பு நமது உரிமை: டிரம்ப்

பாதுகாப்பு என்பது பொது மக்களின் உரிமை என்று அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்தார். பிரிட்டனில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அறிந்ததும் அவர் அந்நாட்டுப் பிரதமர் தெரசா மேயுடன் தொடர்பு கொண்டு பேசினார். பிரிட்டனுக்குத் தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதி கூறினார்.
அதையடுத்து டிரம்ப் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்து: நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமானால், மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். எனது தடை உத்தரவு நடவடிக்கை நாட்டில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும். பாதுகாப்பு நமது அடிப்படை உரிமை; நீதிமன்றங்கள் எனது தடை சட்டத்தை முடக்காமல், நாட்டு மக்களின் உரிமைகளைத் திருப்பி அவர்களுக்கு அளிக்க வேண்டும்' என்று டிரம்ப் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com