உணவை சிந்திய சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண் கைது; விடியோவைப் பார்த்து மலேசியா போலீஸ் நடவடிக்கை

சாப்பிடும் போது உணவை சிந்தியதற்காக, 6 வயது சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண்ணை மலேசிய காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
உணவை சிந்திய சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண் கைது; விடியோவைப் பார்த்து மலேசியா போலீஸ் நடவடிக்கை

கோலாலம்பூர்: சாப்பிடும் போது உணவை சிந்தியதற்காக, 6 வயது சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண்ணை மலேசிய காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

சிறுமியை மரத்தினால் ஆன ஸ்கேலால் 30க்கும் மேற்பட்ட தடவைகள் கண்மூடித்தனமாக அடிக்கும் காட்சியை அடையாளம் தெரியாத நபர் விடியோ எடுத்து அதனை சமூக தளத்தில் வெளியிட்டார்.

வைரலாகப் பரவிய இந்த விடியோவைப் பார்த்த மலேசியப் போலீஸார் தாங்களாக முன் வந்து, இந்த பெண்ணைத் தேடி நேற்று கைது செய்துள்ளனர்.

மலேசியாவின் தமன் புசங் பெர்டானா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2 நிமிடம், 50 நொடிகள் ஓடும் இந்த விடியோவில் ஒரு சிறுமி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவளுக்கு முன்பு ஒரு பெண் உட்கார்ந்து கொண்டிருந்தார். சிறுமியை எழுந்து போகுமாறு அப்பெண் கூற, அச்சிறுமி எழுந்து செல்லும் போது சில உணவுப் பொருட்கள் சிந்துகின்றன.

இதைப் பார்த்த அப்பெண்மணி மர ஸ்கேலால் சிறுமியை பலமாக அடிக்கிறார். சிறுமி கதறி அழுதும், அவளுக்கு கருணை பிறக்கவில்லை. தொடர்ந்து அடித்துக் கொண்டே, "எத்தனை முறை அடித்தாலும் உனக்கு ஒழுங்காக சாப்பிடுவது எப்படி என்று தெரியவில்லை. செத்துப்போ, எங்காவது போய்விடு, எங்காவது போய் செத்துவிடு. எப்படி சாப்பிடுவது என்று கூட தெரியவில்லை" என்று கத்துகிறார்.

பிறகு அடிப்பதை நிறுத்திவிட்டு வேறு அறைக்குச் செல்லும் பெண், மீண்டும் வந்து அந்த சிறுமியை அடிக்கிறார்.

இந்த விடியோவை எடுப்பவர், குழந்தையை அடிக்காதீர்கள், ஏன் அடிக்கிறீர்கள், இதைப் புகைப்படம் எடுத்து செய்தியில் வெளியிடுவேன் என்று கூறுகிறார். உடனே அந்த பெண், சிறுமியை உள்ளேப் போ என்று கூறுவதுடன் ஒரு விடியோ முடிகிறது.

அடுத்த விடியோவில், அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள், அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். ஏன் இப்படி ஒரு குழந்தையைப் போட்டு அடிக்கிறாய் என்று மற்றவர்கள் கேட்க, நான் அந்த குழந்தையை அடிக்கவில்லை. கண்டிக்கிறேன் அவ்வளவுதான் என்று பதில் சொல்கிறார்.

மேலும், அந்த குழந்தையின் பெற்றோர் பற்றியும் சிலர் பேசுகிறார்கள். அதற்கு, அப்பெண், இந்த குழந்தையை நான் தத்தெடுத்து வளர்க்கிறேன் என்று பதில் கூறுகிறார்.
 

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டுவிட்டார். அப்பெண்ணை கைது செய்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com