கத்தார் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து உரிமம் ரத்து

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் சவூதி அரேபியாவில் செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை அந்நாடு செவ்வாய்க்கிழமை அதிரடியாக ரத்து செய்தது.
கத்தார் ஏர்வேஸ் விமானங்களை இயக்குவதில் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்.
கத்தார் ஏர்வேஸ் விமானங்களை இயக்குவதில் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்.

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் சவூதி அரேபியாவில் செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை அந்நாடு செவ்வாய்க்கிழமை அதிரடியாக ரத்து செய்தது.

இஸ்லாமிய தேசம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்குத் துணை போவதாக கத்தார் மீது குற்றம் சாட்டி அந்நாட்டுடனான உறவைத் துண்டித்துக் கொள்வதாக சவூதி அரேபியா திங்கள்கிழமை அறிவித்தது. கத்தார் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளை வெளியேற 48 மணி நேரம் கெடு விதித்தது. கத்தாரில் உள்ள சவூதி தூதரக அதிகாரிகளை உடனடியாக தாய்நாடு திரும்புமாறும் உத்தரவிட்டது.
மேலும், சவூதி வான் எல்லைப் பகுதிக்குள் கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் பறக்கத் தடை விதித்தது.
இந்த நிலையில், கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சவூதியிலிருந்து செயல்பட வழங்கிய உரிமத்தை ரத்து செய்வதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. சவூதியில் செயல்பட்டு வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களையும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் மூடுமாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் கத்தார் அரசுக்கு சொந்தமானதாகும்.
சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து, சவூதியின் பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலிருந்து புறப்பட வேண்டிய கத்தார் ஏர்வேஸ் விமான சேவைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ஏராளமான விமானங்கள் இயக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்த நிலையில், இந்த திடீர் அறிவிப்பு வெளியானது. மாற்று ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல், அந்த விமான நிலையங்களில் பெரும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது.
சவூதியின் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து அந்த நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளின் பிற இடங்களிலும் விமானங்களை இயக்குவதில் குழப்பம் நீடித்தது. கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் முக்கிய வளைகுடா பிராந்திய விமானப் போக்குவரத்தின் முக்கிய மையாக உள்ளது.
பின்னணி: இஸ்லாமிய தேசம் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு கத்தார் துணை போவதாக சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், யேமன், லிபியா ஆகிய 6 நாடுகள் குற்றம் சாட்டி, அதனுடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக திங்கள்கிழமை அறிவித்தன.
இந்தக் குற்றச்சாட்டை கத்தார் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக திடீர் அறிவிப்பை வெளியிட்ட அந்த நாடுகள் இது தொடர்பாக தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கத்தார் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் துருக்கியும் குவைத்தும் தலையிட்டு சமரசம் செய்ய முன்வந்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com