ஜப்பானில் மேலும் ஓர் அணு உலை இயங்கத் தொடங்கியது

ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தகாஹாமா அணுமின் நிலையத்தின் 3-ஆவது அணு உலை, செவ்வாய்க்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.

ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தகாஹாமா அணுமின் நிலையத்தின் 3-ஆவது அணு உலை, செவ்வாய்க்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.
ஃபுகுஷிமா விபத்துக்குப் பிறகு அந்த நாட்டில் அணு மின் நிலையங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்ப்புகளை சமாளித்து இந்த அணு உலையை ஜப்பானிய அரசு திறந்துள்ளது.
இத்துடன், ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு ஜப்பான் இயக்கத் தொடங்கும் அணு உலைகளின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. இவை தவிர, இன்னும் ஏராளமான அணு உலைகள் இயக்கப்படாமல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
தற்போது இயங்கத் தொடங்கியுள்ள தகாஹாமா அணு உலை, தலைநகர் டோக்கியோவிலிருந்து 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ஜப்பானில், கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உருவான சுனாமியால் அந்த நாட்டின் ஃபுகுஷிமா பகுதியிலுள்ள டாய்ச்சி அணு மின் நிலைய உலைகளின் இயக்கம் தடைபட்டது. அத்துடன், அணு உலைகளைக் குளிர்விக்கும் அமைப்பும் சேதமடைந்ததால் அவற்றின் வெப்பம் அதிகரித்து வெடித்துச் சிதறின.
இதில் நச்சுத்தன்மை வாய்ந்த கதிர்வீச்சு வெளியேறி, அந்தப் பகுதியிலிருந்த மக்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்த விபத்தில் நேரடியாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும் கதிர்வீச்சு உள்ளிட்ட காரணங்களால் பின்னர் சுமார் 1,600 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து, 1986-ஆம் ஆண்டின் ரஷியாவின் செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பிறகு நேரிட்ட மிக மோசமான அணு விபத்து என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com