கத்தாருடன் 6 நாடுகள் உறவு துண்டிப்பு: என்னதான் பிரச்னை?

பயங்கரவாதத்துக்கு துணை போவதாக குற்றம் சாட்டி, கத்தாருடன் உள்ள அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக சவூதி, எகிப்து உள்ளிட்ட 6 அரபு நாடுகள் அறிவித்துள்ளன.
கத்தார் ஏர்வேஸ் விமானங்களை இயக்குவதில் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்.
கத்தார் ஏர்வேஸ் விமானங்களை இயக்குவதில் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்.


பயங்கரவாதத்துக்கு துணை போவதாக குற்றம் சாட்டி, கத்தாருடன் உள்ள அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக சவூதி, எகிப்து உள்ளிட்ட 6 அரபு நாடுகள் அறிவித்துள்ளன.

இதனால், செயற்கையாக உருவாக்கப்பட்ட உணவு பொருள் பற்றாக்குறை, விமான சேவை பாதிப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளை கத்தார் எதிர்கொண்டுள்ளது.

சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், யேமன், லிபியா ஆகிய 6 நாடுகள் கத்தாருடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்தன. இது தொடர்பாக அந்த நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டன.

இஸ்லாமிய தேசம் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு கத்தார் உதவி வருவதாகவும் பல்வேறு பிரிவினைவாத இயக்கங்களுடன் கைகோத்து வளைகுடா பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையையும் அமைதியையும் அந்நாடு குலைப்பதாகவும் சவூதி வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அந்த 6 நாடுகளும் தங்களது வெளியுறவு அதிகாரிகளை உடனடியாக வெளியேறி தாய்நாடு திரும்புமாறு உத்தரவிட்டன. அதே போல தங்கள் நாடுகளில் உள்ள கத்தார் வெளியுறவுத் துறை மற்றும் பிற அதிகாரிகள் வெளியேற 48 மணி நேர அவகாசம் அளித்தன.

ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வாழும் ஈரானுடன் கத்தார் மிக நெருக்கமாக இருந்து வருவது சவூதிக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் அதன் தலைவர் முகமது மோர்ஸிக்கும் கத்தார் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது எகிப்தை எரிச்சலடையச் செய்துள்ளது.

எகிப்தில் மக்களின் அமைதிப் புரட்சி மூலம் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியைக் கவிழ்த்த பின்னர், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது. எனினும் மக்கள் விரோதப் போக்கால் அந்த ஆட்சி ராணுவத்தால் கலைக்கப்பட்டு முகமது மோர்ஸி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் முகமது மோர்ஸிக்கும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கும் கத்தார் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது.

கத்தாரின் அதிரடி பதில்
பயங்கரவாதத்துக்கு துணை போவதாக கூறப்படும் குற்றச்சாட்டை கத்தார் திட்டவட்டமாக மறுத்தது. 'இந்தக் குற்றச்சாட்டில் சிறிது கூட நியாயமில்லை' என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

முதலில் பாதிக்கப்பட்டது விமான சேவை
அரபு வளைகுடா பிராந்தியத்தின் மிகப் பெரிய விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் அந்த 6 நாடுகளுக்கும், அந்த நாடுகள் வழியாகவும் விமான சேவை அளித்து வந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சவூதியிலிருந்து செயல்பட வழங்கிய உரிமத்தை ரத்து செய்வதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. 

சவூதியில் செயல்பட்டு வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களையும் மூடுமாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. சவூதியின் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து அந்த நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளின் பிற இடங்களிலும் விமானங்களை இயக்குவதில் குழப்பம் நீடித்தது. கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் முக்கிய வளைகுடா பிராந்திய விமானப் போக்குவரத்தின் முக்கிய மையாக இருந்தது.

என்னென்ன விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்? 
கத்தார் நாடு எண்ணெய் வளமும், எரிவாயு வளமும், பண பலமும் மிகுந்த நாடுதான். இருப்பினும், உணவுப் பொருள்களுக்கு முழுக்க முழுக்க சவூதியையே அது நம்பியுள்ளது.

கத்தார் சவூதியுடன் மட்டுமே நிலப்பரப்பில் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. எனவே சவூதியுடனான எல்லை மூடப்பட்டுவிட்டதால் கத்தாரில் உணவுப் பற்றாக்குறை உருவாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. 

கத்தாரில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் காரணமாக கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை எல்லாம் மக்கள் வாங்கி பதுக்கத் தொடங்கியதால் பல கடைகள் வெறிச்சோடிவிட்டன. தற்போதே மக்கள் உணவுப் பொருள்களை சேமித்துவைக்கத் தொடங்கிவிட்டதால் அசாதாரண சூழ்நிலை அங்கு நிலவுகிறது. இதனால் செயற்கை உணவுப் பற்ற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும், மிகப்பெரிய விமான சேவையைக் கொண்ட கத்தார் ஏர்லைன்ஸின் விமானங்கள் தங்கள் நாடுகளின் வான்வெளியில் பறக்கவும் சவூதி உள்ளிட்ட நாடுகள் தடைவிதித்துள்ளதால் பெரும் சிக்கலை கத்தார் எதிர்கொண்டுள்ளது.

மக்கள் தொகை
கத்தாரில் அந்நாட்டுக் குடிமக்களே ஒரு  சிறுபான்மையினர் போலத்தான் இருப்பார்கள். அதாவது மொத்த மக்கள்தொகையில் கத்தார் மக்கள் வெறும் 12.1 சதவீதம்தான். ஆனால், இந்தியர்கள் 25%, 10 சதவீதம் வங்கதேசத்தினர், இலங்கை நாட்டவர் 5.6% என 52 சதவீதம் மக்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான். கத்தாரில் தற்போது 40 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கிறார்கள். கத்தார் நாட்டு குடிமக்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரம் மட்டுமே.

வெளிநாட்டவருக்கு சிக்கல்?
இந்தப் பிரச்னையால் கத்தாரில் இருக்கும் வெளிநாட்டவர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கத்தாருக்கு நேர்ந்துள்ள சிக்கலை தீர்த்துவைக்க துருக்கியும், குவைத்தும் சமரசம் செய்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அது எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது விரைவில் தெரியும்.

கத்தாரில் நீண்ட காலமாக அமெரிக்க ராணுவ தளம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் தலைமையகமாக அந்த தளம் செயல்பட்டு வருகிறது. கத்தாரின் அல்-உதேயித் பகுதியில் அமைத்துள்ள விமான தளத்தில் 10,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பிரச்னையில் அமெரிக்கா எப்படி செயலாற்றும் என்பது வெகு விரைவில் தெரியும்.

இந்தியர்களின் நிலை?
இந்த நிலையில், கத்தார் வாழ் இந்தியர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் எந்த ஆபத்தும் இல்லை வதந்திகளை நம்பவேண்டாம் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும் இந்திய தூதரத்தை தொடர்பு கொள்ள உதவி எண்களையும் அறிவித்துள்ளது.

பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலும் பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது. 44255777, 55575086, 50536234, 55512810, 55532367, 66013225 என்ற எண்களில் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தை labour.doha@mea.gov.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com