'போர் ஆயத்த நிலையில் இல்லாத அமெரிக்க ராணுவம்': பாதுகாப்புத் துறை அமைச்சர் அதிர்ச்சி

அமெரிக்க ராணுவம் போர் ஆயத்த நிலையில் இல்லை என்பது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் நாடாளுமன்ற அவைக்குழுவிடம்
'போர் ஆயத்த நிலையில் இல்லாத அமெரிக்க ராணுவம்': பாதுகாப்புத் துறை அமைச்சர் அதிர்ச்சி

அமெரிக்க ராணுவம் போர் ஆயத்த நிலையில் இல்லை என்பது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் நாடாளுமன்ற அவைக்குழுவிடம் தெரிவித்தார்.
ஆயுதப் படை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் முன்பாக அவர் தெரிவித்தது: பட்ஜெட் ஒதுக்கீடு குறைப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்த 3 மாதங்களில் நான் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றேன். இப்போது 4 ஆண்டுகள் கடந்த பிறகு மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைக் கையாளும் இடத்தில் உள்ளேன். அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் போர் ஆயத்த நிலை எனக்கு அதிர்ச்சியை அளித்தது.
போர்க்களத்தில் எதிரி ஏற்படுத்தும் இழப்பைவிட, நிதி ஒதுக்கீடு குறைப்பு தற்போது ஏற்படுத்தியிருக்கும் இழப்பு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.
இந்த நிலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். அதிபர் டிரம்ப் அளித்துள்ள புதிய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் வழங்க வேண்டும்.
தற்போதைய கால கட்டம் அமெரிக்க பாதுகாப்புப் படைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ரஷியா, வட கொரியா, சீனா, ஈரான், பயங்கரவாத இயக்கங்கள் ஆகிய 5 முனைகளில் அமெரிக்கப் படைகள் சவால்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக சீனா, வட கொரியா, ஈரான் கடந்த பல ஆண்டுகளாகத் தீவிர முயற்சி செய்து அமெரிக்காவின் ராணுவ பலத்தை எதிர்க்கும் திறனை உருவாக்கி வருகின்றன. வட கொரியா நிலை கவலையளிப்பதாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் திறனைப் பன்மடங்கு அதிகரிக்க வேண்டியது முக்கியத்துவம் பெறுகிறது. நமது ராணுவ பலத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை இனியும் தாமதப்படுத்தக் கூடாது என்றார் அவர்.
ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாகக் குறைக்கப்பட்டது. குறிப்பாக, அவருடைய இரண்டாவது பதவிக் காலத்தில் காலக் கெடு விதித்து பல ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன.
டிரம்ப் அதிபர் பதவியேற்றதும் வெளியிட்ட பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 57,400 கோடி டாலர் (சுமார் ரூ. 37.31 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் ஒபாமாவின் இறுதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ததைவிட இது 10 சதவீதம் கூடுதலாகும். அது தவிர போர்க்காலத் தேவைக்கான சிறப்பு நிதியாக 6,500 கோடி டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எனினும் ஆயுதப் படை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் மேக் தார்ன்பெரி உள்ளிட்ட பிற எம்.பி.க்களும் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு போதாது என்று குறை கூறியுள்ளனர்.
அமெரிக்க படைகளின் வெற்றியை உறுதி செய்யும் விதத்தில் அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், மேலும் மேலும் புதிய பொறுப்புகளை சுமத்தி வருகிறோம் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com