லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 12 பேர் பலி; 74 பேர் படுகாயம்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்; 74 பேர் படுகாயமடைந்தனர்.
லண்டனில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கொழுந்து விட்டு எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு.
லண்டனில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கொழுந்து விட்டு எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்; 74 பேர் படுகாயமடைந்தனர்.
மேற்கு லண்டன் பகுதியில் உள்ள 'கிரீன்ஃபெல்' என்ற இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 120 வீடுகள் உள்ளன. இங்கு 600-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வந்தனர். பிரிட்டன் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 1 மணியளவில் இந்த குடியிருப்பின் 2-ஆவது மாடியில் திடீரென தீப்பிடித்தது.
எதிர்பாராத அதிர்ச்சி: தீ மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கு பரவியது. இதனால், வீடுகளுக்குள் வெப்பமும், புகையும் பரவத் தொடங்கியது. இதனால், அதிர்ச்சியடைந்து விழித்த குடியிருப்புவாசிகள் நிலைமையை புரிந்து கொண்டு வேகமாக வெளியேறத் தொடங்கினர்.
விபத்து குறித்து தகவலறிந்ததும், 40 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த 400 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மாடிகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், 20 ஆம்புலன்ஸ் வாகனங்களில் நகரின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சில நிமிடங்களில்... மின்தூக்கிகள் இயங்காததால், படிக்கட்டுகள் வழியாகவே அனைவரும் கீழே இறங்கினர். இதில் கீழே விழுந்து சிலர் காயமடைந்தனர். இதனிடையே, அடுக்குமாடி குடியிருப்பின் ஒவ்வொரு மாடியாக தீ பரவத் தொடங்கியது. காற்று வீசியதால் தீ வேகமாகப் பரவியது. வானைத் தொடும் அளவுக்கு உயர்ந்து நின்ற அந்த கட்டடம் முழுவதையும் சில நிமிடங்களிலேயே தீ சூழத் தொடங்கியது.
அதிகாலையில் அதிர்ச்சி: நகரின் நடுவே பிரமாண்டமாக அமைந்திருந்த கட்டடம் தீப்பிடித்து எரிந்தது, அதிகாலையிலேயே லண்டன்வாசிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்பகுதியில் விண்ணை முட்டும் அளவுக்கு பல மணி நேரத்துக்கு புகை சூழ்ந்திருந்தது.
முற்றிலும் எரிந்தது: தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் கட்டடத்துக்குள் எளிதில் செல்ல முடியவில்லை. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகே தீ அணைக்கப்பட்டது. குடியிருப்பின் 24 மாடிகளும் முற்றிலும் எரிந்துவிட்டன. வீடுகளில் இருந்த ஒரு பொருள் கூட தீயிலிருந்து தப்பவில்லை.
உயிரிழப்பு அதிகரிக்கும்: தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 74 பேரில் 20 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும், மீட்புக் குழுவினரால் 12 மாடிகள் வரையே சென்று மீட்புப் பணியில் ஈடுபட முடிந்தது. அதற்கு மேல் உள்ள மாடிகளில் வசித்தவர்களில் சிலர் வீடுகளுக்கு உள்ளேயே கருகியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
உதவி கேட்டு கூக்குரல்: மாடியில் சிக்கியிருந்த சிலர் குழந்தைகளுடன் உதவி கேட்டுக் கூக்குரல் இட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சிலர் மெத்தைகளை உடலில் சுற்றிக் கொண்டு கீழே குதித்தனர். அவர்கள் எலும்பு முறிவுடன் உயிர்தப்பினர். அந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களாவர். அவர்கள் ரம்ஜான் மாத நோன்புக்கு உணவு தயாரிப்பதற்காக அதிகாலையில் எழுந்துவிட்டனர். தீப்பிடித்ததும் அவர்களில் பலர் சுதாரித்துக் கொண்டு உடனடியாக வெளியேறிவிட்டனர்.
மிக மோசமான விபத்து: இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'லண்டனில் கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த மோசமான தீ விபத்து இது. தீப்பிடித்த கட்டடம் இடிந்து விழும் அபாயம் இருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன' என்றார்.
காரணம் என்ன? '2 அல்லது 3-ஆவது மாடியில் பழுதான நிலையில் பயன்படுத்தப்பட்டு வந்த குளிர்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட தீ, குடியிருப்பு முழுவதும் பரவியிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சதிவேலை எதுவும் இருக்குமா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்து நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 1974-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். எனினும் கடந்த ஆண்டுதான் பல கோடி பவுண்டு செலவில் புதுப்பிக்கப்பட்டது.

குழந்தையை காப்பாற்றி, தாய் பலி
தீப்பிடித்த குடியிருப்பின் 10-ஆவது மாடியில் சிக்கியிருந்த பெண் ஒருவர், தனது குழந்தையை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டார்.
கீழிருந்தவர்களை நோக்கி காப்பாற்றுமாறு கத்தியபடி, ஜன்னல் வழியாக குழந்தையை கீழே வீசினார். தரையை நோக்கி வேகமாக விழுந்த குழந்தையை, கீழே இருந்த ஒருவர் வேகமாக ஓடிச் சென்று கையில் பிடித்துக் கொண்டார். இதனால் அந்த குழந்தை உயிர் தப்பியது.
ஆனால், அந்த குழந்தையின் தாய் தீயில் சிக்கி உயிரிழந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை நெகிழச் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com