மசூத் அஸார் விவகாரம்: மீண்டும் எதிர்க்கும் முனைப்பில் சீனா

ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா.சபையில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா.சபையில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்பான தகவலை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங், பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சூசகமாகத் தெரிவித்தார்.
மசூத் அஸார் விவகாரத்தை ஐ.நா. குழு அடுத்த மாதம் பரிசீலிக்க உள்ள நிலையில் இத்தகைய கருத்துகளை சீனா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மசூத் அஸார் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கச் செய்ய இந்தியா முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இதுதொடர்பாக இந்தியா கடந்த ஆண்டு ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அந்தக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக இருக்கும் சீனா, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதையடுத்து, இந்தியாவின் முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதனிடையே, இதுதொடர்பாக அமெரிக்கா அண்மையில் கொண்டு வந்த தீர்மானத்தையும் சீனா எதிர்த்தது.
இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பத்திரிகையாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங்கிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பலமுறை தெரிவிக்கப்பட்டாகிவிட்டது. சமநீதி, நடுநிலைத்தன்மை ஆகியற்றின் மீது சீனா மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே எங்களது செயல்பாடுகளும் உள்ளன.
மசூத் அஸார் விவகாரத்தில் இந்தியாவின் கோரிக்கைக்கு ஐ.நா.வில் உள்ள சில உறுப்பு நாடுகளும் அதிருப்தி தெரிவித்துள்ளன. அவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com