லண்டன் மசூதி அருகே வேன் தாக்குதல்: ஒருவர் சாவு

பிரிட்டன் தலைநகர் லண்டனில், ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு மசூதியை விட்டு வெளியே வந்தவர்கள் மீது, மர்ம நபர் வேனை மோதச் செய்ததில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர்.
லண்டனின் ஃபின்ஸ்பரி பார்க் மசூதி அருகே பாதசாரிகள் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேன் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்து காவல் காக்கும் போலீஸார்.
லண்டனின் ஃபின்ஸ்பரி பார்க் மசூதி அருகே பாதசாரிகள் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேன் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்து காவல் காக்கும் போலீஸார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில், ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு மசூதியை விட்டு வெளியே வந்தவர்கள் மீது, மர்ம நபர் வேனை மோதச் செய்ததில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் காயமடைந்தனர்.
பயங்கரவாதத் தாக்குதல் என்று வருணிக்கப்படும் இந்தச் சம்பவத்துக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே உள்பட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத ஆதரவாளர்கள் இந்தத் தாக்குதலைச் சுட்டிக்காட்டி முஸ்லிம்களைத் தூண்டும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனில், கடந்த நான்கு மாதங்களில் நிகழ்த்தப்படும் நான்காவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஊடகங்கள் தெரிவிப்பதாவது:
லண்டனில் உள்ள ஃபின்ஸ்பரி பார்க் மசூதி அருகே உள்ள 'செவன் சிஸ்டர்ஸ்' சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.15 மணிக்கு (உள்ளூர் நேரம்) மிக வேகமாக வந்த வேன் ஒன்று, பாதசாரிகள் மீது மோதியது.
இதில் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களுக்கான உடைகளில் இருந்தனர். மசூதியில் ரம்ஜான் தொழுகை முடித்து வெளியே வந்தவர்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காயமடைந்த 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
வேனை ஓட்டி வந்த நபரை அங்கிருந்தவர்கள் பிடித்து அடித்து உதைத்தனர்.
எனினும், மசூதியின் இமாம் அவர்களைத் தடுத்து நிறுத்தி, வேனை ஓட்டி வந்தவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர் என்று ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலை நினைவூட்டுவதாகவும், தாக்குதலுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.
லண்டன் பெருநகர காவல்துறை துணை ஆணையர் நீல் பாசு கூறுகையில், தாக்குதலின்போது உயிரிழந்த நபர் ஏற்கெனவே முதலுதவி பெற்று வந்ததார். அவரது உயிரிழப்புக்குக் காரணம் வேன் தாக்குதல்தானா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து பயங்கரவாதத் தடுப்புக் காவல்துறையினர் விசாரித்து வருவதால், இது ஒரு பயங்கரவாதச் சம்பவமாகவே கருதப்படுவதாக அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com