ஐ.எஸ். தாக்குதல்: இராக்கில் 12-ஆம் நூற்றாண்டு மசூதி அழிப்பு

இராக்கின் மொசூல் நகரில் இருந்த 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்-நூரி மசூதியை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்தனர்.
ஐ.எஸ். தாக்குதல்: இராக்கில் 12-ஆம் நூற்றாண்டு மசூதி அழிப்பு

இராக்கின் மொசூல் நகரில் இருந்த 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்-நூரி மசூதியை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்தனர்.
மிகப் பிரசித்தமான அல்-நூரி மசூதி புதன்கிழமை இரவு வெடிகுண்டுகளைப் பொருத்தி ஐ.எஸ். பயங்கரவாதிகள் தகர்த்ததாக இராக் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
மொசூலில் அமைந்திருந்த அல்-நூரி மசூதி "பெரிய மசூதி' என்றும் அறியப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு மொசூல் நகரை பயங்கரவாதிகள் கைப்பற்றியபோது, "இஸ்லாமிய கலீஃபா' அமைந்துவிட்டதாக ஐ.எஸ். தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி அந்த மசூதியில்தான் அறிவிப்பை வெளியிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
அல்-நூரி மசூதியில் அமைக்கப்பட்டிருந்த சாய்ந்த ஸ்தூபி மிகவும் புகழ் பெற்றது. கடந்த 840 ஆண்டுகளுக்கும் மேலாக சாய்ந்த நிலையிலேயே நின்றிருந்தது. அந்த ஸ்தூபி மற்றும் மசூதி வளாகத்தில் பகுதியில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டன.
இஸ்லாமியருக்கு மிகவும் புனிதமான இரவு என்று கருதப்படும் லைலத் அல்-காதர் வேளையில் அல்-நூரி மசூதியை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் வைத்து தகர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லைலத் அல்-காதரின்போதுதான், நபிகள் நாயகத்துக்கு குர்ஆன் அருளப்பட்டது.
அல்-நூரி மசூதி தகர்ப்பு குறித்த செய்தி அறிவிப்பை இராக் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட பிறகு, இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கம் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், மசூதி தகர்ப்புக்கு அமெரிக்க வான்வழித் தாக்குதலே காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அல்-நூரி மசூதியும், அங்கிருந்த சாய்ந்த ஸ்தூபியும் அழிக்கப்பட்டதற்கு காரணம் அமெரிக்கா தலைமையிலான படையினரின் தாக்குதல்தான் என்று ஐ.எஸ். குற்றம் சாட்டியது.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க கூட்டுப் படை திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர் ரையன் டில்லன் இது தொடர்பாக அசோசியேட்டட் செய்தி நிறுவனத்திடம் கூறியது:
அல்-நூரி மசூதி முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது வான்வழிக் கண்காணிப்பு மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தகர்ப்பு சம்பவத்துக்குப் பின்னால் அமெரிக்க கூட்டுப் படை இல்லை. அது குறித்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறோம். மசூதி தகர்க்கப்பட்ட வேளையில் அந்தப் பகுதியில் கூட்டுப் படையினர் எந்தவித தாக்குதல் நடவடிக்கையிலோ அல்லது ரோந்து நடவடிக்கையிலோ ஈடுபடவில்லை என்று திட்டவட்டமாகக் கூறிக் கொள்ள விரும்புகிறோம் என்றார்.
ஏற்கெனவே தகர்க்க முயற்சி: அல்-நூரி மசூதியின் சாய்ந்த ஸ்தூபியை கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தகர்க்க ஐ.எஸ். பயங்கரவாதிகள் முயற்சி செய்தனர். அல்-ஹத்பா என்று அறியப்பட்ட அந்த சாய்ந்த ஸ்தூபி இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு விரோதமானது என்று பயங்கரவாதிகள் கூறினர். ஆனால் அப்போது மொசூல் நகர மக்கள் பெரும் திரளாகக் கூடி மசூதியைச் சூழ்ந்து நின்று பாதுகாப்பு அரண் அமைத்தனர். இதையடுத்து, மசூதி தகர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது.
ஆனாலும், மொசூல் நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்த பல சரித்திர, புராதன முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து அழித்தனர். உருவ வழிபாட்டை நினைவூட்டும் விதமாக உள்ளதால் அவை அழிக்கப்பட வேண்டியவை என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் காரணம் கூறினர்.
பழைமையான மொசூல் நகரின் தென் எல்லைப் பகுதியில் அல்-நூரி மசூதி அமைந்திருந்தது. மொசூல் மீட்புக்கான தாக்குதல் நடவடிக்கைகளை 8 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க கூட்டுப் படையினரின் உதவியுடன் இராக் ராணுவம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 8 லட்சத்துக்கும் அதிகமானோர் நகரைவிட்டு வெளியேறினர். தற்போது அந்நகரில் சுமார் 1 லட்சம் பேர் உள்ளதாகக் கருதப்படுகிறது.
மொசூல் பழைய நகரப் பகுதியை மீட்கும் தாக்குதல் நடவடிக்கை கடந்த வாரம் தொடங்கியது. நகரில் எஞ்சியிருந்த பயங்கரவாதிகள் அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தக் கூடும் என்பதால் ராணுவத்தினரின் இறுதித் தாக்குதல் தாமதப்பட்டு வந்தது. இராக் படையினர் அல்-நூரி மசூதியிலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் இருந்தனர்.
ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்தே அந்த மசூதியைச் சுற்றி வசித்து வந்த மக்களை வெளியேறுமாறு பயங்கரவாதிகள் உத்தரவிட்டனர். இறுதித் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் தயாராகி வந்தனர் என்று கருதப்பட்ட நிலையில், புகழ் பெற்ற அல்-நூரி மசூதி புதன்கிழமை இரவு குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
இராக்குக்கு எதிரான குற்றம்: அல்-நூரி மசூதி அழிப்பானது இராக் தேசத்துக்கு எதிரான குற்றாகும் என்று அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரி குறிப்பிட்டார்.
இராக்கில் உள்ள அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஜோசப் மார்ட்டின் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:
சரித்திரப் புகழ் பெற்ற அல்-நூரி மசூதி அழிக்கப்பட்டது மொசூல் நகர மக்களுக்கும் இராக் தேசத்துக்கும் எதிரான கடுங்குற்றாகும். இந்தப் பேரழிவுக்கான பொறுப்பு நிச்சயமாக ஐ.எஸ். அமைப்பையே சேரும். இஸ்லாமிய தேசம் என்கிற பயங்கரவாத அமைப்பு ஏன் அழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதற்கு இதுவே சரியான உதாரணமாகும்.

தோல்வியை ஒப்புக் கொண்டது ஐ.எஸ்.: இராக் பிரதமர்

இராக் சரித்திரத்துடன் பின்னிப் பிணைந்த அல்-நூரி மசூதியைத் தகர்த்ததன் மூலம் தங்களின் முழுத் தோல்வியை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கருத்து தெரிவித்தார்.
டுவிட்டர் வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் இக்கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com