சவூதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர்

சவூதி அரேபியாவின் புதிய மன்னராக, அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரும், மன்னர் சல்மானின் மகனுமான முகமது பின் சல்மான் (31) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர்

சவூதி அரேபியாவின் புதிய மன்னராக, அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரும், மன்னர் சல்மானின் மகனுமான முகமது பின் சல்மான் (31) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏற்கெனவே பட்டத்து இளவரசராக இருந்த உள்துறை அமைச்சர் முகமது பின் நயெஃப் அந்த அந்தஸ்தை இழந்துள்ளார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் பின் அப்துலஸீஸ் அல் சவூத் கடந்த 2015}ஆம் ஆண்டு பதவியேற்றார்.
அதனைத் தொடர்ந்து, அதுவரை சவூதி அரேபிய மக்களால் அதிகம் அறியப்படாத மன்னரின் மகன் முகமது பின் சல்மானுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன.
அரசக் குடும்பத்தின் பிற உறுப்பினர்களைவிட வயதிலும், அனுபவத்திலும் குறைந்த முகமது பின் சல்மானுக்கு பாதுகாப்புத் துறை, நிதித் துறை ஆகிய உயர் பொறுப்புகள் வழங்கப்பட்டது அந்தக் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சவூதியின் அடுத்த அரசராகும் வாய்ப்பு முகமது பின் சல்மானுக்கே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இதுவரை பட்டத்து அரசராக இருந்த உள்துறை அமைச்சர் முகமது பின் நயெஃபிடமிருந்து குற்றவியல் வழக்குகளை கவனித்துக் கொள்ளும் அதிகாரத்தை பறித்து மன்னர் சல்மான் கடந்த வாரம் உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை வெளியிடப்பட்ட அரச உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சவூதி அரேபியாவின் அடுத்த மன்னராகும் பட்டத்து இளவரசர் அந்தஸ்து, முகமது பின் சல்மானுக்கு வழங்கப்படுகிறது.
விசுவாச மன்றத்தின் (சவூதி அரேபியாவைத் தோற்றுவித்த மன்னர் அப்துல்}அஜீஸின் மகன்கள் மற்றும் பேரன்கள் அடங்கிய அமைப்பு) உறுப்பினர்கள் பெருவாரியாகவாக்களித்து அவரை பட்டத்து இளவரசராகத் தேர்ந்தெடுத்தனர் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமர்சனம்: தற்போது பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான், பாதுகாப்புத் துறை அமைச்சராக சரியாகச் செயல்படவில்லை என்று பலர் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யேமன் உள்நாட்டுச் சண்டையில் தலையிட்டு பிரச்னையை அதிகமாக்கியது, அந்த நாட்டுத் தலைநகர் சனாவை ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்க முடியாதது, யேமன் சண்டையில் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் சவூதி அரேபியாவுக்கு சில ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மறுத்தது போன்றவை அவரது தோல்விகளாகக் கூறப்படுகின்றன.

சவூதி அரேபியப் பொருளாதாரம் எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை மாற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com