சானிடரி நாப்கின்ஸ் வாங்குவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் ராணுவ பெண்கள்!

வட கொரியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கட்டுமான படைகளில் சேவை செய்து வந்தாலும், பலர் தொடர்ச்சியாக தங்களின் உயர் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகுகிறார்கள்.
சானிடரி நாப்கின்ஸ் வாங்குவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் ராணுவ பெண்கள்!

வட கொரியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு கட்டுமான படைகளில் சேவை செய்து வந்தாலும், அவர்களுள் பலரும் தொடர்ச்சியாக தங்களின் உயர் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகளை சந்தித்து வருகிறார்கள். ராணுவத்தில் பணியாற்றிய வீரமங்கைகளுள் சிலர் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அங்கு வாழும் ஆண்கள் மற்றும் பெண்களென இருபாலருக்கும் சம உரிமையை வட கொரியாவின் சட்ட புத்தகம் வழங்கினாலும் அது அவர்களுடைய உண்மையான வாழ்வியலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது. 

சமீப காலங்களில் வட கொரியாவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்தும், அவர்கள் அங்கு அனுபவிக்கும் துயரங்கள் குறித்தும், பலர் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பகிர்ந்தனர். வட கொரியாவில் இருந்து தப்பித்து உலகின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக வாழும் பெண்கள் சிலரும், வட கொரியாவில் வாழ்ந்தது நரகத்தில் வாழ்ந்ததைப் போன்ற மிக மோசமான கனவு என்று பார்ப்பவர்களின் கல் நெஞ்சும் கரையும் வகையில் கண்ணீர்மல்க கூறினர்.

அதில் பெண்கள் இசைக்க, நடனம் ஆட, திரைப்படம் பார்க்க, பேச இவ்வளவும் ஏன் பெண்களின் சிந்தனைகளுக்கு கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததாக மனம் குமுறினர். ஹாலிவுட் திரைப்படம் ஒன்றை பார்த்ததற்காக பெண் ஒருவரை பொதுமக்களின் முன்னிலையில் துக்கிலிட்டுள்ளது வட கொரியா அரசு. 1945-ல் நடைப்பெற்ற வட கொரிய பெண்ணிய புரட்சிக்குப் பிறகே முதலில் இவர்களுக்கான அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு ஏற்பட்ட பல ஆட்சி மாற்றங்களினாலும், 1950 - 1953 வரை நடந்த கொரியா போர் போன்றவைகளால் பெண் இனமானது ஒடுக்கப்பட்டு பல விதமான மனித உரிமை அத்துமீறல்களையும் சந்தித்து வருகிறது.  

வட கொரியாவை தற்போது ஆளும் ‘கொரியா தொழிலாளர்கள் கட்சி’ 2013-ஆம் ஆண்டு ஆட்சியமைத்தால் செய்வதாக தந்த தேர்தல் வாக்குறுதிகளில், நாட்டிலுள்ள பெண்கள் அனைவருக்கும் கல்வி மற்றும் கொரியாவின் ராணுவத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 17 முதல் 23 வரை உள்ள பெண்கள் மட்டுமே ராணுவத்தில் சேர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டது. 

ஆனால், உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாற்றாகவே பல பெண்களுக்கு ராணுவ பணிகள் கொடுக்கப்படுகின்றன என்று ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டு சேர்க்கப்படுகிறார்களாம். ஒருவேளை இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தால் அந்த பெண்ணின் குடும்பமே அடியோடு சீரழிக்கப்படுகிறதாம்.

சமீபத்தில் பியன்கோஸன் மாகாணத்தில் உள்ள யோகிகான் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் பாலியல் தொழில் செய்யும் 22 பெண்களை கைது செய்துள்ளனர், அவர்களுள் 17 பெண்கள் ராணுவத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில் நம்மை அதர்ச்சியடையச் செய்கிறது.

தொடர்ச்சியாக தங்களின் உயர் அதிகாரிகளினால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல வன்கொடுமைகளை அனுபவித்த இவர்கள், இரவு நேரங்களில் ராணுவ குடியிருப்பை விட்டு வெளியே சென்று பாலியல் தொழிலில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தை வைத்தே, மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கின்ஸை வாங்க முடிகிறது என்று கூறியுள்ளார்கள். பெண்களின் சுகாதாரத்திற்கு தேவையான மிகவும் அத்தியாவசிய பொருளான சானிடரி நாப்கின்ஸை வாங்குவதற்கு கூட பாலியலில் ஈடுபட்டு பணம் ஈட்ட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் இந்த ராணுவ வீராங்கனைகள்.

70 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கு சம உரிமையை சட்ட ரீதியாக வழங்கிய நாடு வட கொரியா. சம உரிமையை கொடுத்துவிட்டு வாழ்வுரிமையை பறித்துள்ளது இந்த கட்டாய ராணுவ சேவை. இது ஆலமரத்தின் வேரை வெட்டிவிட்டு அதன் விழுதுகளில் ஊஞ்சல் கட்டி கொடுக்கும் மூடத்தனத்திற்கு நிகரானது. நாட்டையே பாதுகாப்பதற்கான உரிமையை பெற்ற இந்த பெண்கள் அவர்களை பாதுகாத்து கொள்வதற்கான உரிமையையும் வீரத்தையும் இழந்து நிற்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com