பிரிட்டன்-மோரீஷஸ் இடையிலான தகராறு: ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

பிரிட்டனுக்கும், மோரீஷஸூக்கும் இடையே நீண்ட காலப் பிரச்னையாக உள்ள சாகோஸ் தீவு தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் கருத்தை நாடும் ஐ.நா. பொதுச் சபை தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது.

பிரிட்டனுக்கும், மோரீஷஸூக்கும் இடையே நீண்ட காலப் பிரச்னையாக உள்ள சாகோஸ் தீவு தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் கருத்தை நாடும் ஐ.நா. பொதுச் சபை தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது.

மோரீஷஸ் நாட்டுக்கு பிரிட்டன் கடந்த 1968-இல் சுதந்திரம் அளித்தது. அதற்கு முன்பாக, மோரீஷஸூடன் இணைந்திருந்த சாகோஸ் தீவை 1965-இல் பிரிட்டன் துண்டித்தது. எனினும், சாகோஸ் தீவுக்கு மோரீஷஸ் தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. இந்த விவகாரத்தில் மோரீஷஸூக்கும் பிரிட்டனுக்கும் இடையே தொடர்ந்து தகராறு நீடித்து வருகிறது.
இந்நிலையில், சாகோஸ் தீவின் சட்டரீதியிலான அந்தஸ்து குறித்து பரிசீலிக்குமாறு சர்வதேச நீதிமன்றத்தைக் கோருவதற்கு ஐ.நா. பொதுச் சபையில் மோரீஷஸ் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது. பிரிட்டன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், மோரீஷஸின் தீர்மானத்தின் மீது வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்பட 94 நாடுகள் வாக்களித்தன.
15 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
முன்னதாக, மேற்கண்ட தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன் பேசியதாவது:
மோரீஷஸூடன் எங்களுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ஆதரவளிப்பதன் ஒரு பகுதியாக சாகோஸ் தீவுக்கு உரிமை கோரும் மோரீஷûஸ நாங்கள் தொடர்ச்சியாக ஆதரித்து வந்துள்ளோம். இத்தீர்மானத்தை நாங்கள் ஆதரிப்பதோடு, அதன் மீது வாக்களிக்கவும் செய்கிறோம் என்றார் அக்பருதீன்.
மோரீஷஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனிருத் ஜகந்நாத் பேசியதாவது:
சாகோஸ் தீவை 18-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் ஆட்சிபுரிந்தது. குறைந்தபட்சம் அப்போது முதல் அது எங்கள் நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. அந்தப் பகுதி பிரிட்டனுக்கு 1810-இல் அளிக்கப்பட்டது. சட்டவிரோதமாக மோரீஷஸூடன் இருந்து துண்டிக்கப்பட்ட 1965-ஆம் ஆண்டு வரை அது அப்படியே இருந்தது.
இந்த விவகாரத்தில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரித்து அளிக்கப்படும் வாக்கானது, காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட முயற்சிக்கும் நடைமுறையை ஆதரிக்கும் வாக்காகும். அது சர்வதேச சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சிக்கும் அளிக்கப்படும் மரியாதையாகும் என்றார் அவர்.
ஐ.நா.வுக்கான பிரிட்டன் தூதர் மேத்யூ ரைக்ராஃப்ட் பேசுகையில், "இத்தீர்மானத்தை பிரிட்டன் எதிர்க்கிறது. ஏனெனில், இருதரப்பு தகராறு ஒன்றைப் பற்றி சர்வதேச நீதிமன்றத்தின் கருத்தை நாடுவது சரியான நடவடிக்கையாக இருக்காது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com