போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை

போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்கள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்துள்ளன.

போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்கள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்துள்ளன.
இந்தியா-ரஷியா இடையேயான வருடாந்திர கூட்டம், ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், இரு நாடுகளும் இணைந்து ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்து, இரு நாட்டு ராணுவ வலிமையை அதிகரிக்கச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ரஷியா சென்றுள்ளார்.
இந்தியா-ரஷியா இடையே ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஆணையத்தின் 17-ஆவது கூட்டம், ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, பாதுகாப்புத் துறையில் இந்தியாவும், ரஷியாவும் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் அவரும், ரஷிய அமைச்சர் செர்ஜி சோய்குவும் கையெழுத்திட்டனர்.
மேலும், இந்தியா-ரஷியா இடையே ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்துக்கு இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன. அத்திட்டத்தை இரு நாடுகளைச் சேரந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தயாரித்திருந்தனர்.
இந்தியா-ரஷியா இடையே ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஆணையத்தின் கூட்டத்தில் ஜேட்லி பேசுகையில், ரஷிய சாதனங்கள் மற்றும் தளவாடங்களின் விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்பு-பழுதுபார்ப்பு சேவைக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கு ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் வழங்கும் முக்கியமான பெரிய நாடுகளில் ஒன்றாக ரஷியா விளங்குகிறது. எனினும், அந்நாட்டிடம் இருந்து வாங்கும் சாதனங்கள் மற்றும் தளவாடங்களின் உதிரிபாகங்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் இந்தியாவின் முப்படைகளுக்கும் பெரிய பிரச்னையாக உள்ளது. ஏனெனில், அது ரஷியாவிடம் இருந்து வாங்கும் தளவாடங்களின் பராமரிப்பை பாதிக்கிறது.
மேற்கண்ட கூட்டத்தில், "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் இந்திய பாதுகாப்புத்துறையில் ரஷிய நிறுவனங்கள் பங்கேற்பதற்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் ஜேட்லி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com