பாகிஸ்தான் தொடர் தாக்குதல்: பலி எண்ணிக்கை 62ஆக உயர்வு

பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களில் பலி எண்ணிக்கை 62ஆக அதிகரித்தது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பயங்கரவாதிகள் மறைவிடத்தைச் சுற்றி வளைத்து தாக்குதல் நிகழ்த்த தயாராகும் ராணுவ வீரர்கள்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பயங்கரவாதிகள் மறைவிடத்தைச் சுற்றி வளைத்து தாக்குதல் நிகழ்த்த தயாராகும் ராணுவ வீரர்கள்.

பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களில் பலி எண்ணிக்கை 62ஆக அதிகரித்தது.

பலூசிஸ்தான், பழங்குடியினர் பகுதியான குர்ரம் மற்றும் கராச்சியில் நிகழ்த்தப்பட்ட நான்கு தாக்குதல்களில் மேலும் 100 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
முதல் சம்பவமாக, பலூசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் காவல் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு வெளியே வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்து மோதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் பலியாகினர். பலியானவர்களில் 7 பேர் காவல் துறையினர். மேலும் 9 காவலர்கள் உள்பட 21 பேர் அந்தத் தாக்குதலில் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. அதே சமயத்தில், பாகிஸ்தான் தெஹ்ரீக்}ஏ}தலிபான் (டிடிபி) இயக்கத்திலிருந்து பிரிந்து செயல்பட்டு வரும் ஜமாதுல் அஹ்ரார் பயங்கரவாத இயக்கமும் அந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது. பலூசிஸ்தான் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, குர்ரம் பழங்குடியினர் பகுதியில் இரட்டை பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கும் அந்த மாகாணத்தின் தலைநகர் பரசினாரின் துரி சந்தைப் பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. ரமலானை முன்னிட்டுப் பரிசுப் பொருள்கள் வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் சந்தையில் கூடிய வேளையில் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, உதவி செய்வதற்காக அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் விரைந்தனர். அப்போது இரண்டாவது குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த இரட்டைத் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்தனர்; மேலும் 75 பேர் காயமடைந்தனர்.
சன்னி பிரிவைச் சேர்ந்த லஷ்கர்}ஏ}ஜாங்வி பயங்கரவாத இயக்கம் துரி சந்தை தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து, ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது என்று காவல் துறையினர் கருத்து தெரிவித்தனர்.
இவை தவிர, கராச்சி நகரில் உணவு விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்த காவல் துறையினரைக் குறி வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில் 4 காவலர்கள் உயிரிழந்தனர். இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பயங்கரவாதிகள் அந்தத் தாக்குதலை நிகழ்த்தினர்.
கராச்சி தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகள் துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பினர். இதற்கு முன்னர் அதிகம் அறியப்படாத அன்சர் அல்}ஷரியா என்ற குழு தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புப் படையினரைக் குறி வைத்து மேலும் பல தாக்குதல்களை நிகழ்த்தப் போவதாகவும் அந்தக் குழு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ரமலான் காலத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நாட்டின் அதிபர் மம்னூன் ஹுசேன், பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
"பயங்கரவாதத்தைப் பூண்டோடு ஒழிக்க நாம் சபதம் ஏற்க வேண்டும்' என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்தார்.
பலூசிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் அன்வருல் ஹக் கக்கர், குவெட்டா தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
ராணுவத்தினர் தேடுதல் வேட்டை: வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதலையடுத்து, நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாகிஸ்தான் ராணுவம் முழுவீச்சில் தொடங்கியது.
இது தொடர்பாக ராணுவத் தலைமை தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா கூறியதாவது:
புனிதமான பண்டிகைக் காலத்தில் நாட்டு மக்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பயங்கரவாதத் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இது கோழைத்தனமான செயலாகும். இந்தத் தாக்குதல்களை எல்லைக்கு அப்பால் கிடைக்கும் பாதுகாப்பான புகலிடங்களில் உள்ளவர்கள் நிகழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது. நாடு முழுவதும் உளவுத் தகவல்கள் சேகரிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உளவுத் தகவல் அடிப்படையில் ராணுவத்தினரும் பிற பாதுகாப்பு அமைப்பினரும் இணைந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எதிரியின் பயங்கரவாதச் செயல்களை பாகிஸ்தான் உறுதியாக எதிர்கொள்ளும் என்றார் அவர்.
பொதுவாக இந்தியாவை "எதிரி' என்று பாகிஸ்தான் குறிப்பிட்டு வருகிறது. ஆனால் சில வேளைகளில் ஆப்கானிஸ்தானையும் எதிரி என்று குறிப்பிடுவது உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com