வெள்ளை மாளிகையில் மோடிக்கு நாளை இரவு விருந்து

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுவதுடன், அந்த நாட்டு அதிபர் மாளிகையில்
வெள்ளை மாளிகையில் மோடிக்கு நாளை இரவு விருந்து

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுவதுடன், அந்த நாட்டு அதிபர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெறும் இரவு விருந்தில் மோடி பங்கேற்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அதிபர் மாளிகை இரவு விருந்துக்கு அழைக்கப்படும் முதல் உலகத் தலைவர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, அதிபர் மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை மிகச் சிறப்பானதாக்க வெள்ளை மாளிகை விரும்புகிறது. அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
இருதரப்புப் பேச்சுவார்த்தையின் முடிவில் நடைபெறும் வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பதிலாக, வெள்ளை மாளிகை இரவு விருந்தாக நடத்தப்படும். அந்த விருந்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், பிரதமர் மோடியும் பங்கேற்பார்கள்.
புதிய ஆட்சியில், ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். அந்த வகையில், இது முக்கியத்துவம் வாய்ந்த விருந்தாகும்.
ஆசிய பசிபிக் பகுதியிலும், உலக அளவிலும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இந்திய - அமெரிக்க நல்லுறவு மிக முக்கியமானது என்று அதிபர் டிரம்ப் கருதுகிறார். அத்தகைய நல்லுறவை மேம்படுத்த, பிரதமர் மோடியின் வருகை வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது பயங்கரவாதத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு உலக மற்றும் பிராந்தியப் பிரச்னைகள், வர்த்தக உறவு உள்ளிட்ட ஏராளமான விவகாரங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்க - இந்தியப் பாதுகாப்பு உறவு அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்தப் போக்கு தொடர வேண்டும் என அதிபர் விரும்புகிறார். வலிமையான இந்தியாவே அமெரிக்காவின் நன்மையாகும்.
இந்தியாவுக்கு முக்கியப் பாதுகாப்புக் கூட்டாளி அந்தஸ்தை கடந்த ஆண்டு அளித்து அமெரிக்கா மேற்கொண்ட மிக முக்கியமான நடவடிக்கையாகும். அந்த அந்தஸ்தின் பலன், பிரதமர் மோடியின் தற்போதைய வருகையில் பிரதிபலிக்கும் என்று நம்புகிறோம்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 1,500 கோடி டாலர் மதிப்பிலான பாதுகாப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்களால் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவும், இந்தியாவும் உறுதிபூண்டுள்ளன. எனவே, இருதரப்புப் பேச்சுவார்த்தையில் பயங்கரவாதக் கண்காணிப்பு, உளவுத் தகவல்கள் பரிமாற்றம், இணையதளத்தை பயங்கரவாதிகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது போன்ற விவகாரங்கள் இடம் பெறும்.
பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான புதிய கூட்டு நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளுக்காக இந்தியா 300 கோடி டாலருக்கும் மேல் நிதியுதவி அளித்து வருகிறது. அந்த நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, ஜனநாயகத்தை மலரச் செய்வதில் இந்தியாவின் பங்கு இன்றியமையாதது ஆகும்.
வட கொரியாவுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது. இதுபோன்ற உலக விவகாரங்களில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் உள்ள பொதுப்படையான கொள்கை நலன்கள் குறித்து இருதரப்பிலும் ஆலோசனைகள் நடைபெறும்.
பொருளாதாரம்: தற்போது இந்தியா - அமெரிக்கா இடையோன இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 11,400 கோடி டாலராக உள்ளது. இதனை அதிகரிக்கவும், வர்த்தகம் சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும் ஆலோசனை நடத்தப்படும். இதுமட்டுமன்றி, இருநாட்டு மக்களிடையேயான நேரடித் தொடர்பை மேம்படுத்தவும் பிரதமர் மோடியின் வருகை வழிவகுக்கும். தற்போது சுமார் 40 லட்சம் இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வசிக்கின்றனர். 1.66 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் படிக்கின்றனர். இதன் காரணமாக, 500 கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. 64,000 அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி முதல்முறையாக அமெரிக்கா வருகிறார். சமூக வலைதளங்களில் மிக அதிகமாக வாசிக்கப்படுவது உள்பட பல்வேறு ஒற்றுமைகளை இரு தலைவர்களும் கொண்டுள்ளனர்.
தங்கள் நாட்டு மக்களின் வளர்ச்சி குறித்த அதீத அக்கறை கொண்ட இரு தலைவர்களின் ஒற்றுமையான குணாதிசயங்கள் காரணமாக, இரு தலைவர்களும் விவாதிப்பதற்குரிய பொதுவான விவகாரங்கள் தாராளாமாக இருக்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
அமெரிக்காவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் திங்கள்கிழமை முதல் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
இருதரப்புப் பேச்சுவார்த்தையில், அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹெச்.ஆர். மெக்மாஸ்டர், வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ரோஸ், நிதியமைச்சர் ஸ்டீவன் நுச்சின் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com