ஆண்டுக்கு 100 கோடி மரங்களை நடும் ஆளில்லா விமானம்!

ஆண்டுக்கு 100 கோடி மரங்களை நடும் ஆளில்லா விமானத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
மரக் கன்றுகள் நடும் ஆளில்லா விமானத்துடன் சூசன் கிரஹாம் (வலது).
மரக் கன்றுகள் நடும் ஆளில்லா விமானத்துடன் சூசன் கிரஹாம் (வலது).

ஆண்டுக்கு 100 கோடி மரங்களை நடும் ஆளில்லா விமானத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பயோகார்பன் என்ஜினியரிங் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த விமானத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சூசன் கிரஹாம் கூறியதாவது:
மரங்கள் வளர்வதற்கு உரிய தேவையான நிலங்களை ஆளில்லா விமானம் கண்டறிந்து, விதைகளை தாமாகவே மண்ணுக்குள் செலுத்தும். செங்குத்தான மலைப் பகுதிகளை முன்பு அடைய முடியாத இருந்த நிலை மாறி தற்போது அதுபோன்ற இடங்களிலும் இந்த ஆளில்லா விமானத்தின் மூலம் மரங்களை நட முடியும் என்பது இதன் தனிச் சிறப்பு.
மரங்களை நடுவதற்கு மிகவும் பொருத்தமான இடங்களைக் கண்டறிந்து விதைகளைத் தூவ அந்த நிலங்களின் முப்பரிமாண மாடல் ஆளில்லா விமானங்களில் பயன்படுத்தப்பட்டது.
மேலும், புள்ளிவிவரங்களைப் பதிவிறக்கம் செய்து அதனை மேம்படுத்தி, மரம் நடுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம், மரங்களை எங்கு நடலாம் என்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழலை எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பது குறித்தும் துல்லியமான முடிவுகளையும் மேற்கொள்ள முடியும்.
உலகில் ஆண்டுதோறும் 1,500 கோடி மரங்கள் அழிக்கப்படுகின்றன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கரிலான காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்படுகின்றன.
இந்த நிலையில், பருவநிலை மாற்றமும் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
கோடிக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்ட போதிலும், நாம் ஒவ்வொரு ஆண்டும் 900 கோடி மரங்களை மட்டுமே நடுகிறோம். நிகர அளவில் பார்க்கும்போது 600 கோடி மரங்கள் பற்றாக்குறையாகவே உள்ளது. காடுகளை அழிக்கும் வேகத்துக்கு ஏற்பட நாம் மரங்களை திரும்ப நடுவதில்லை என்பது கண்கூடு.
இந்த நிலையில், கைகளால் நடுவதைவிட 10 மடங்கு அதிகமான மரங்களை வெறும் 20 சதவீத செலவில் இந்த ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி நட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் சூஸன் கிரஹாம்.
அசுர வேகத்தில் காடுகள் அழிக்கப்பட்டு வரும் வேளையில் இந்த செய்தி வன ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com