கத்தாரிலிருந்து துருக்கி படைகளை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை

கத்தாரில் நிறுத்தப்பட்டுள்ள துருக்கி ராணுவத்தினரை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் கருத்து தெரிவித்தார்.

கத்தாரில் நிறுத்தப்பட்டுள்ள துருக்கி ராணுவத்தினரை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் கருத்து தெரிவித்தார்.

இஸ்தான்புல்லில் அமைந்துள்ள மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரமலான் தொழுகைக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கத்தார் மீது சவூதி உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள தடைகள் அடிப்படையிலேயே சட்ட விரோதமானது. அதற்கும் மேலாக, அந்தத் தடைகளை விலக்கிக் கொள்ள விதிக்கப்பட்டுள்ள பதின்மூன்று நிபந்தனைகள் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு விரோதமானவை. அதுபோன்ற நிபந்தனைகளை விதிப்பது ஒரு நாட்டின்இறையாண்மைக்கு எதிரானது என்பது மிகத் தெளிவு.
கத்தாருக்கு துருக்கி வழங்கி வரும் பொருள் உதவிகளும் ராணுவ உதவிகளும் தொடரும். தேவைக்கு ஏற்ப அந்த உதவிகள் மேலும் அதிகரிக்கப்படும். இதுவரை 100 சரக்கு விமானங்களில் உணவு உள்ளிட்ட உதவிப் பொருள்களை கத்தார் மக்களுக்கு அனுப்பியுள்ளோம். அந்நாட்டில் நிறுத்தியுள்ள துருக்கி படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, கூடுதலாக ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், இரு படைப் பிரிவு வீரர்கள் கத்தாருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சவூதி கூட்டு நாடுகள் நிபந்தனை விதித்தபடி, கத்தாரில் நிறுத்தப்பட்டுள்ள துருக்கிப் படைகளை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.
இஸ்லாமிய தேச பயங்கரவாதக் குழு உள்ளிட்டோருக்கு உதவிகளை வழங்கி வருவதாகக் கூறி சவூதி உள்ளிட்ட 7 மத்திய கிழக்கு நாடுகள், கத்தாருடனான உறவைத் துண்டித்துக் கொள்வதாக அறிவித்து, பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஈரானுடனான உறவைத் துண்டித்துக் கொள்வது, கத்தாரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல் ஜஸீரா செய்தித் தொலைக்காட்சியை முடக்குவது, கத்தாரில் உள்ள துருக்கியின் ராணுவ முகாமை மூடுவது உள்ளிட்ட 13 நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்றினால் தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று சவூதி அரசு கூறியது.
ஆனால் அந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று கத்தார் மறைமுகமாகத் தெரிவித்துவிட்டது. இயற்கை எரிவாயு உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ள கத்தார், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குப் பிற நாடுகளையே நம்பியுள்ளது.
இந்த நிலையில், சவூதி உள்ளிட்ட நாடுகளின் நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கு அத்தியாவசியப் பொருள்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகள் சரக்கு விமானங்கள் மூலமாகவும், சரக்குக் கப்பல்கள் மூலமாகவும் உதவிப் பொருள்களைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com