டிரம்ப் - மோடி இன்று சந்திப்பு

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை திங்கள்கிழமை சந்தித்துப் பேச இருக்கிறார்.
வாஷிங்டன் நகரில் விமானப்படைத் தளத்துக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை தம்மை வரவேற்கக் கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி.
வாஷிங்டன் நகரில் விமானப்படைத் தளத்துக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை தம்மை வரவேற்கக் கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை திங்கள்கிழமை சந்தித்துப் பேச இருக்கிறார்.

போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, போர்ச்சுகல் பயணத்தை முடித்துக் கொண்டு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றடைந்தார்.
முக்கிய விஷயங்கள்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக அவரை மோடி சந்தித்துப் பேச இருகிறார். இந்தச் சந்திப்பின்போது எச்1பி விசா விவகாரம், பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து பணியாற்றுவது, அணுசக்தித் துறை ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து டிரம்ப்புடன் மோடி பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஆந்திரத்தில் 6 அணுமின் உலைகளை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் இந்த சந்திப்பின்போது கையெழுத்தாகாது என்றே தெரிகிறது.
கூட்டறிக்கை: மோடி-டிரம்ப் சந்திப்புக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட இருக்கிறது. எனினும், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய கடற்படைக்கு 22 ஆளில்லாத கண்காணிப்பு விமானங்களை வழங்குவதற்கு மோடியின் இந்தப் பயணத்தின்போது அமெரிக்கா ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியபோது, இந்த ஒப்பந்தத்தால் இந்தியா அதிக நிதி ஆதாயம் அடைகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார். அதே நேரத்தில், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா பின்வாங்காது என்று மோடி உறுதிபடத் தெரிவித்தார். இதனால், இந்திய-அமெரிக்க உறவில் சிறிய சுணக்கம் ஏற்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், மோடியின் இந்தப் பயணத்தால் இரு தரப்பு உறவு மேலும் வலுப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு: அமெரிக்க அதிபரைச் சந்தித்த பிறகு, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரைச் சந்திக்கும் மோடி அவர்கள் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் 600 பேர் வரை பங்கேற்க இருக்கின்றனர்.
உற்சாக வரவேற்பு: வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ விமானப்படைத் தளத்தில் தனி விமானத்தில் வந்து இறங்கிய மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான தளத்துக்கு வெளியே குழுமியிருந்த இந்திய வம்சாவளியினர் மோடியை வாழ்த்தி கோஷமிட்டனர். மோடி அவர்களுடன் கைகுலுக்கி வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அங்கிருந்து ஹோட்டலுக்கு மோடி சென்றார். ஹோட்டலுக்கு வெளியே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் கூடி நின்று மோடிக்கு வரவேற்பு அளித்தனர். காரில் இருந்து இறங்கிய மோடி நேராக ஹோட்டலுக்குள் செல்லாமல், சாலைக்கு வந்து அவர்களை நோக்கி கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.


எச்1பி விசா விவகாரம்

எச்1பி விசா மூலம்தான் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு இந்தியப் பணியாளர்களை அதிக அளவில் அனுப்பி வருகின்றன. இந்தியப் பணியாளர்களால் அமெரிக்கப் பணியாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் எச்1பி விசா வழங்க டிரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், அதன் பணியாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த விசா விஷயத்துக்கு மோடி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com