கத்தார் விவகாரத்தில் சவூதியின் நிபந்தனைகள் ஏற்க முடியாதவை: அமெரிக்கா

கத்தார் விவகாரத்தில் சவூதி உள்ளிட்ட நாடுகளின் சில நிபந்தனைகள் ஏற்க முடியாதவை என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கருத்து

கத்தார் விவகாரத்தில் சவூதி உள்ளிட்ட நாடுகளின் சில நிபந்தனைகள் ஏற்க முடியாதவை என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பது:
கத்தார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். தற்போது அந்த நாடுகள் முன்வைத்திருக்கும் நிபந்தனைகளின் பின்னணியில் உள்ள விவகாரங்களை, சம்பந்தப்பட்ட அனைவரும் தீவிரமாக ஆராயும் விதத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போதுதான் சரியான தீர்வு கிடைக்கும்.
கத்தாருடன் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள சவூதி கூட்டு நாடுகள் விதித்துள்ள சில நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை, நிறைவேற்ற முடியாதவை. ஆவேசமான கருத்துகளை வெளியிடுவதை இரு தரப்பினரும் கைவிட வேண்டும். அதுவே பதற்றத்தைத் தணிக்க உதவும். விரிவான, வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு கிடைக்கும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நாடுகள் இடையே இயல்பான உறவுகள் திரும்புவதற்கான பூர்வாங்கப் பேச்சுவார்த்தை, சமரச முயற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரும் நாடுகளை அமெரிக்கா ஊக்குவிக்கும். சமரச முயற்சியில் தற்போது குவைத் ஈடுபட்டுள்ளது. அதனை வரவேற்கிறோம். மத்திய கிழக்குப் பகுதியில் விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று ரெக்ஸ் டில்லர்சன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இஸ்லாமிய தேசம், அல்}காய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவி வருவதாக கத்தார் மீது குற்றம் சாட்டி, சவூதி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன்உள்ளிட்ட 7 நாடுகள், அந்த நாட்டுடனான அனைத்து உறவுகளையும் முற்றிலும் துண்டித்துக் கொள்வதாக அண்மையில் அறிவித்தன.
உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்குப் பதின்மூன்று நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை சவூதி கூட்டு நாடுகள் கத்தாரிடம் வழங்கியுள்ளன.
அதில் மிக முக்கியமாகக் கருதக் கூடியது, ஈரானுடனான உறவை கத்தார் முறித்துக் கொள்ள வேண்டும் என்பது. கத்தாரில் நிறுத்தப்பட்டுள்ள துருக்கி படைகளை வெளியேற்றுவது, தோஹாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல்ஜஸீரா செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்தை முடக்குவது, சவூதி கூட்டு நாடுகளுக்குப் பெரும் தொகையை நஷ்ட ஈடாக வழங்குவது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை என்று கத்தார் மறைமுகமாகக் கூறிவிட்டது.
இதனிடையே, அந்த நாட்டில் உள்ள தங்கள் ராணுவத்தினரை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் திட்டவட்டமாக அறிவித்திருப்பது குறிப்பிடத் தகுந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com