ஜிஎஸ்டி அமலாக்கம்: அமெரிக்காவில் பாடமாக வைக்க மோடி யோசனை

இந்தியாவில் அமல்படுத்தவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சரக்கு - சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) குறித்து அமெரிக்க வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் பாடமாக வைக்கலாம்
ஜிஎஸ்டி அமலாக்கம்: அமெரிக்காவில் பாடமாக வைக்க மோடி யோசனை

இந்தியாவில் அமல்படுத்தவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சரக்கு - சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) குறித்து அமெரிக்க வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் பாடமாக வைக்கலாம் என்று பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பெரு நிறுவன அதிபர்களுடனான சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசு முறைப் பயணமாக அமெரிக்கா, போர்ச்சுகல், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குக் சென்றுள்ள மோடி, வாஷிங்டனில் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க பெரு நிறுவன அதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக், கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, சிஸ்கோ நிறுவனத் தலைவர் ஜான் சேம்பர்ஸ், அமேஸான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெஜோஸ் உள்பட பல்வேறு முக்கிய பெரு நிறுவன அதிபர்கள் அதில் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டில் வெளிப்படையான ஆட்சியையும், திறமையான நிர்வாகத்தையும், நிலையான வளர்ச்சியையும் வழங்க இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் நிர்வாக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் 7,000 சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளை உலகளாவிய இலக்குகளைச் சென்றடைவதற்கான முன்னோட்டமாகவே கருத முடிகிறது.
மறைமுக வரிகள் அனைத்துக்கும் மாற்றாக ஒரே சீரான வரி விதிப்பான ஜிஎஸ்டி முறையை இந்திய அரசு அமல்படுத்த உள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய வரிச் சீர்திருத்த நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவது என்பது மிகவும் சவாலான காரியம். அதனைத் திறம்பட நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்த பாடத்தை வருங்காலத்தில் அமெரிக்க வணிக மேலாண்மை நிறுவனங்கள், தங்களது பாடத்திட்டத்தில் சேர்க்கலாம் என்றார் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com