பிரிட்டனில் ஆட்சியை நிலைநிறுத்த உதிரிக்கட்சியுடன் தெரசா மே ஒப்பந்தம்

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த உதிரிக் கட்சியுடன் முறைப்படியான ஆதரவு உடன்படிக்கை கையெழுத்தாகியது.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே முன்னிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் வடக்கு அயர்லாந்தின் டி.யூ.பி.க்கும் இடையேயான ஆதரவு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுக் கைகுலுக்கும் இரு கட்சிக் கொறடாக்கள்.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே முன்னிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் வடக்கு அயர்லாந்தின் டி.யூ.பி.க்கும் இடையேயான ஆதரவு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுக் கைகுலுக்கும் இரு கட்சிக் கொறடாக்கள்.

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த உதிரிக் கட்சியுடன் முறைப்படியான ஆதரவு உடன்படிக்கை திங்கள்கிழமை கையெழுத்தாகியது.

ஆதரவுக்கு பதில் உதவியாக, வடக்கு அயர்லாந்து பகுதியின் மேம்பாட்டுக்குச் சிறப்பு நிதியாக 100 கோடி பவுண்டு (சுமார் ரூ. 8,200 கோடி) ஒதுக்கப்படும் என்று அந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஜூன் 8}ஆம் தேதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரிட்டன் அரசியல் மரபுப்படி, அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற நிலையில், கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க எலிசபெத் அரசி அழைப்பு விடுத்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 8 இடங்கள் குறைவாக இருந்த நிலையில், வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த தீவிர வலதுசாரிக் கட்சியான டெமோக்ராடிக் யூனியனிஸ்ட் கட்சியின் (டி.யூ.பி.) ஆதரவை பிரதமர் தெரசா மே நாடினார்.
ஆதரவு அளிப்பதாக டி.யூ.பி. ஒப்புக் கொண்டாலும், அந்த இரு கட்சிகளிடையே முறைப்படியான உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தை கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்தது.
அதன் இறுதியில் இரு கட்சிகளிடையே ஆதரவுக்கான உடன்படிக்கை திங்கள்கிழமை கையெழுத்தானது.
அதன்படி, டி.யூ.பி.யைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் கன்சர்வேடிவ் கட்சியின் தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதாவது, தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் முழுவதும் ஆதரவு தொடரும். எனினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது மறு ஆய்வு செய்யப்படும்.
டி.யூ.பி.யின்இந்த நிலைப்பாட்டுக்குப் பிரதி உதவியாக, வடக்கு அயர்லாந்து பகுதியின் மேம்பாட்டுக்கு 100 கோடி பவுண்டுகள் (சுமார் ரூ. 8,200 கோடி) சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.
இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து, ஆளும் கட்சியின் திட்டங்களை வெளியிடும் அரசியின் நாடாளுமன்ற உரை, பட்ஜெட், பிரெக்ஸிட் தொடர்பான மசோதாக்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றுவதில் எந்த இடையூறும் இருக்காது.
பிரதமர் தெரசா மே, டி.யூ.பி. கட்சித் தலைவர் ஆர்லீன் ஃபோஸ்டர் முன்னிலையில், இரு கட்சிகளின் நாடாளுமன்றக் கட்சிக் கொறடாக்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
வாக்களிப்புடன் கூடிய எந்த சந்தர்ப்பம் வந்தாலும் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்து, ஆட்சியைக் கவிழ்த்து, விரைவில் மறு தேர்தல் நடைபெறச் செய்வோம் என்று பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளக் கட்சி கூறி வருகிறது.
இந்த நிலையில்தான், கன்சர்வேடிவ் கட்சிக்கும் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த உதிரிக் கட்சிக்கும் இடையே ஸ்திரமான ஆட்சியை உறுதி செய்யும் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com