இந்தியாவின் இயல்பான கூட்டாளி நெதர்லாந்து: மோடி புகழாரம்

அமெரிக்கா, நெதர்லாந்து, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் 3 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டு நெதர்லாந்து சென்றடைந்தார்.

அமெரிக்கா, நெதர்லாந்து, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் 3 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டு நெதர்லாந்து சென்றடைந்தார்.
அந்த நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின்போது, பாரீஸ் சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இரு நாடுகளும், அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதி பூண்டன.
மேலும், சமூகப் பாதுகாப்பு, குடிநீர் ஒத்துழைப்பு, கலாசார ஒத்துழைப்பு ஆகியவற்றில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் நரேந்திர மோடி கூறியதாவது:
ஏவுகணைத் தொழில்நுட்பங்களை இந்தியா எளிதில் வாங்குவதற்கு வழி செய்யும் வகையில், ஏவுகணைத் தொழில்நுட்ப ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அமைப்பில் (எம்டிசிஆர்) இந்தியா கடந்த ஆண்டு உறுப்பினர் ஆனது.
நெதர்லாந்தின் உதவி இல்லாமல் இந்த அந்தஸ்தை இந்தியாவால் அடைந்திருக்க முடியாது. இதற்காக அந்த நாட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நெதர்லாந்து இந்தியாவின் இயல்பான கூட்டாளியாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. இந்த நட்புறவு மேன்மேலும் வலுவடைந்து வருகிறது.
உலக அளவில் இந்தியாவின் 5-ஆவது பொருளாதாரக் கூட்டாளியாக நெதர்லாந்து திகழ்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் அதிக அந்நிய நேரடி முதலீடு செய்யும் 3-ஆவது நாடாக நெதர்லாந்து உயர்ந்துள்ளது என்றார் மோடி.
அப்போது நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் கூறியதாவது:
உலக அளவில் இந்தியா மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருவது அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் வரவேற்க வேண்டிய முன்னேற்றாகும்.
அரசியல்ரீதியில், சட்டத்தின் ஆட்சிக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் வளர்ச்சி உலக அளவில் நன்மை பயக்கும்.
இந்தியா தற்போது உலகப் பொருளாதார சக்தியாகும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தையும், மிகப் பெரிய சந்தையையும் கொண்டுள்ள இந்தியாவால் நெதர்லாந்து பலன் பெறும். நெதர்லாந்தாலும் இந்தியாவுக்கு பலன்கள் கிடைக்கும்.
இந்தியாவின் 20 சதவீத ஏற்றுமதி ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்துள்ளது. அந்த ஏற்றுமதிப் பொருள்கள் முழுவதும் நெதர்லாந்து வழியாகவே செல்கிறது. அந்த வகையில், இந்தியாவுக்கு ஐரோப்பாவின் வாயிலாக நெதர்லாந்து திகழ்கிறது..
இந்தியாவுக்கும், நெதர்லாந்துக்குமான நட்புறவு கடந்த 70 ஆண்டுகளில் வளர்ந்ததைப் போல இன்னும் 70 ஆண்டுகளுக்கும், அதற்குப் பின்னரும் மென்மேலும் வளர்ச்சியடையும் என்றார் அவர்.
இந்தியாவுக்கும், நெதர்லாந்துக்கும் தூதரக உறவு ஏற்பட்டு இந்த ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து பிரதமர் மட்டுமன்றி, அந்த நாட்டின் மன்னர் வில்லியம் அலெக்ஸாண்டர், அரசி மேக்ஸிமா ஆகியோரையும் மோடி சந்திக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com