சரிகிறது டொனால்ட் டிரம்ப் பிம்பம்!

உலக நாடுகளின் பார்வையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான மதிப்பீடு பெருமளவில் சரிந்திருப்பது புதிய கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
சரிகிறது டொனால்ட் டிரம்ப் பிம்பம்!

உலக நாடுகளின் பார்வையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான மதிப்பீடு பெருமளவில் சரிந்திருப்பது புதிய கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற ப்யூ ஆராய்ச்சி மையம் சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பாக இந்தியா உள்பட 37 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. அதன் விவரம்:
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலானோர் அவநம்பிக்கையை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளனர். 37 நாடுகளில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில் ரஷியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமே டிரம்ப் மீது நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களில் 75 சதவீதம் பேர் டிரம்ப் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அவர்கள் டிரம்பை அதிக கர்வம் கொண்டவராகவும், ஆபத்தானவராகவும் கருதுகிறார்கள். மூன்றில் இரண்டு பகுதி மக்கள், டிரம்ப் மீது நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இது, முந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகளுக்கு முற்றிலும் முரணாக இருப்பது தெரியவந்திருக்கிறது. ஏனெனில், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சியின் இறுதிகட்டத்தின்போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 64 சதவீதம் பேர், டிரம்ப் மீது நம்பிக்கை இருப்பதாகவும், அமெரிக்காவை அவர் சிறந்த முறையில் ஆட்சி செய்வார் என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், உலக மக்கள் பார்வையில் டிரம்பின் பிம்பமானது வெகுவாக சரிந்திருப்பதையே தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிகாட்டுகின்றன.
அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில் 43 சதவீதம் பேர் மட்டுமே டிரம்ப்பின் ஆட்சி முறை குறித்து நேர்மறையாக தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் நாட்டு மக்களில் 89 சதவீதம் பேர், டிரம்ப் ஒரு சிறந்த ஆட்சியாளர் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். 77 சதவீதம் பேர், அவரை பொறுமையற்றவர் என்றும், 69 சதவீதம் பேர், அவரை ஆபத்தானவர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவைப் பொருத்தவரை, டிரம்ப் மீது 40 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தை 58 சதவீதம் பேர் புகழ்ந்துள்ளனர்.
சிலி முதல் இத்தாலி வரையிலும், ஸ்வீடன் முதல் ஜப்பான் வரையிலும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலான மக்கள் டிரம்பை ஒரு தகுதியற்ற தலைவராகவும், கர்வம் கொண்டவராகவும் மட்டுமே பார்க்கின்றனர். இதே முடிவுகள்தான், லத்தின் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் பிரதிபலிக்கின்றன.
மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப முடிவெடுத்தது, பாரீஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது, இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்கு வருவதை தடை செய்தது ஆகிய டிரம்பின் கொள்கைகளே அவர் மீதான இத்தகைய வெறுப்புக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக அந்தக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com