பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிட வேண்டும்: மோடி, டிரம்ப் வலியுறுத்தல்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் வலியுறுத்தியுள்ளனர்.
பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிட வேண்டும்: மோடி, டிரம்ப் வலியுறுத்தல்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் வலியுறுத்தியுள்ளனர். பயங்கரவாதத்துக்கு தனது மண் பயன்படுத்தப்படாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இரு தலைவர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும். அப்போது இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும், பயங்கரவாதிகளுக்கான பாதுகாப்பான புகலிடங்களை அழிக்கவும் முயற்சிகளை தீவிரப்படுத்துவது என்று மோடியும் டிரம்ப்பும் உறுதிபூண்டனர். மேலும் மற்ற நாடுகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு தனது நிலப்பகுதி பயன்படுத்தப்படாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியா, அமெரிக்கா ஆகிய இருதரப்பும் வலியுறுத்தின.
மும்பை மற்றும் பதான்கோட்டில் நடைபெற்ற தாக்குதல்களில் தொடர்புடைய சதிகாரர்களையும், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் அமைப்புகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவர்களையும் விரைவாக நீதியின் முன் நிறுத்துமாறு பாகிஸ்தானை இரு நாடுகளும் கேட்டுக்கொண்டன.
தங்களது சந்திப்பின்போது, அல்}காய்தா, ஜெய்ஷ்}ஏ}முகமது, ஐஎஸ், லஷ்கர்}ஏ}தொய்பா, தாவூத் இப்ராஹிம் தலைமையிலான கும்பல் உள்ளிட்டவற்றிடம் இருந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்று மோடியும், டிரம்ப்பும் உறுதிபூண்டனர்.
மேலும், இந்தியாவுக்கு பல கோடி டாலர் மதிப்புள்ள ராணுவ சரக்கு விமானத்தையும், கார்டியன் ரகத்தைச் சேர்ந்த 20 ஆளில்லா உளவு விமானங்களையும் விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளதையும் அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினர். எனினும், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த விவாதமே அதிக முக்கியமாக இடம்பெற்றது. சர்வதேச பயங்கரவாதம் குறித்த ஐ.நா. தீர்மானத்துக்கு இரு தலைவர்களும் தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர். பயங்கரவாதத்துக்கு எதிராக உலக அளவிலான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை இத்தீர்மானம் வலுப்படுத்தும் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம்}மோடி: இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்து, மோடியும் டிரம்ப்பும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி கூறுகையில், இந்தியாவில் அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும், தொழில்}வர்த்தகம் செய்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது குறித்தும் விளக்கினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:
பயங்கரவாதத்தை ஒழிப்பதே எங்களின் முன்னுரிமையாகும். இந்தியாவின் சமூக}பொருளாதார உருமாற்றத்திலும், எங்களின் லட்சியத் திட்டங்களிலும் அமெரிக்காவை முக்கியமான தோழமை நாடாகக் கருதுகிறோம். புதிய இந்தியாவை உருவாக்கும் எனது கண்ணோட்டமும், அமெரிக்காவை மீண்டும் உயரிய நாடாக்கும் டிரம்ப்பின் சிந்தனையும் நமது ஒத்துழைப்புக்கு மேலும் புதிய பரிமாணத்தைச் சேர்க்கும். நாங்கள் தீவிரவாதச் சிந்தனை பரவுவது, பயங்கரவாதம் ஆகியவை குறித்துப் பேசினோம். அவற்றைச் சமாளிப்பதில் ஒத்துழைத்துச் செயல்பட ஒப்புக் கொண்டோம்.
டிரம்ப்புடன் நான் நடத்திய பேச்சுவார்த்தையானது இந்திய}அமெரிக்க உறவில் புதிய அத்தியாயமாகும். இரு நாடுகளிடையே பாதுகாப்பு மற்றும் ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு குறித்து அவருடன் நான் விரிவாக விவாதித்தேன்.
உலக அளவில் வளர்ச்சிக்கான காரணிகளாக இரு நாடுகளும் விளங்குகின்றன. வர்த்தகம், முதலீடுகள் ஆகியவை பரஸ்பர ஒத்துழைப்புக்கான முக்கிய துறைகளாக உள்ளன என்றார் மோடி.
சிறப்பான உறவுகள்}டிரம்ப்: செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது:
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் இதற்கு முன் எப்போதும் இந்த அளவுக்கு வலிமையாகவும் சிறப்பாகவும் இருந்ததில்லை. நம் நாடுகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நமது பொருளாதாரங்களை வளர்ச்சியடையச் செய்யவும், நியாயமான வர்த்தக உறவை உருவாக்கவும் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். பயங்கரவாத அமைப்புகளை ஒழித்துக் கட்டுவதில் இரு நாடுகளும் உறுதியுடன் உள்ளன என்றார் டிரம்ப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com