பொருளாதார உறவை வலுப்படுத்த இந்தியா - அமெரிக்கா உறுதி

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன என்று வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார உறவை வலுப்படுத்த இந்தியா - அமெரிக்கா உறுதி

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன என்று வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையே முரண்பட்ட விஷயங்கள் ஏதேனும் இருக்குமானால், அவற்றுக்குத் தீர்வு காணத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செ"ன்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து உரையாடினார். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் விளக்கினார். வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து அவர் கூறியதாவது: பொருளாதார ரீதியாக இந்தியாவும், அமெரிக்காவும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. அதனை மேலும் வலுப்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தை மோடிக்கும், டிரம்புக்கும் இடையே நடைபெற்றது. அந்த உரையாடலானது மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்தது.
இரு நாடுகளின் பொருளாதாரச் சூழலும் வேகமாக மாறி வருகின்றன. இதன் விளைவாக புதிய தேவைகள் எழுகின்றன. அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான நிலையை இந்தியாவும், அமெரிக்காவும் எட்ட வேண்டும். பரஸ்பரம் பயனளிக்கும் அந்த நிலையை அடைந்துவிட்டால், தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைத்துவிடும்.
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான சந்திப்பின்போது பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற கருத்தை இருவருமே வலியுறுத்தினர். அதன் ஒரு பகுதியாக விமானப் போக்குவரத்து, இயற்கை எரிவாயு துறைகளில் இரு தரப்புக்கும் இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்தத் திட்டமிட்டது.
அதன்படி, அடுத்த ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரவ இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அடுத்து வரும் ஆண்டுகளில் 4,000 கோடி டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 2.5 லட்சம் கோடி) மதிப்பிலான திரவ இயற்கை எரிவாயு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்பப்படுகிறது.
அதேபோன்று வர்த்தக நடைமுறைகளில் நிலவி வரும் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை அகற்றி எளிமையாக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு நாடுகளிலும் உள்ள சந்தை வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர் என்றார் அவர்.
ஹெச்1பி விசா தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத ஜெய்சங்கர், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மின்னணு தொழில்நுட்பத்தில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து மோடியும், டிரம்பும் ஆலோசித்தனர் என்றார்.
இதுதொடர்பாக இந்தியா - அமெரிக்கா தரப்பில் வெளியிட்ட கூட்டறிக்கையிலும் இதே விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com