உலகம் முழுவதும் புதிய இணைய வைரஸ் தாக்குதல்

உலகம் முழுவதும் புதிய இணைய வைரஸ் தாக்குதல் குறித்து ஐரோப்பிய யூனியன் காவல் துறை (யூரோபோல்) அதிகாரிகள் எச்சரித்தனர்.
உலகம் முழுவதும் புதிய இணைய வைரஸ் தாக்குதல்

உலகம் முழுவதும் புதிய இணைய வைரஸ் தாக்குதல் குறித்து ஐரோப்பிய யூனியன் காவல் துறை (யூரோபோல்) அதிகாரிகள் எச்சரித்தனர்.
மின்னஞ்சல் மூலம் ஊடுருவி கணினிகளின் செயல்பாட்டை முடக்கும் "வான்னாகிரை' ரான்சம்வேர் இணைய வைரஸ் கடந்த மாதம் உலகம் முழுவதும் பரவியது. சீன பல்கலைக்கழகங்கள், பிரிட்டன் அரசு மருத்துவமனைகள், அமெரிக்க நிறுவனங்கள் உள்ளிட்ட வற்றின் கணினிகள் ஊடுருவப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் முடங்கின. இந்தியாவிலும் ஹைதராபாத் காவல் துறை இணையதளத்தை ரான்சம்வேர் வைரஸ் தாக்கியது குறிப்பிடத்தக்கது. வைரஸ் தாக்குதலிலிருந்து கணினி விடுவிக்கப்பட வேண்டுமானால், பிணைத் தொகை செலுத்த வேண்டும் என்று ஊடுருவிய விஷமிகள் மிரட்டி வந்தனர். இதுபோன்ற முடக்க இணைய வைரஸ்களை ரான்சம்வேர் என்று குறிப்பிடுவது வழக்கம்.
வான்னாகிரை ரான்சம்வேர் விவகாரம் ஓய்ந்த நிலையில், தற்போது அதைவிட சக்தி வாய்ந்த புதிய இணைய வைரஸ் உலக அளவில் கணினிகளைத் தாக்கி வருவதாக ஐரோப்பிய யூனியன் காவல் துறையான யூரோபோல் அதிகாரிகள் எச்சரித்தனர். அதன் தலைமை இயக்குநர் ராபர்ட் வெயின்ரைட் இது தொடர்பாகக் கூறியதாவது:
பெட்யா என்கிற ரான்சம்வேரின் சக்தி வாய்ந்த வடிவிலான புதிய இணைய வைரஸ் உலகின் பல்வேறு பகுதிகளில் கணினிகளைத் தற்போது தாக்கி வருவதாக யூரோபோலுக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஐரோப்பாவின் பல பகுதிகளிலும், வடக்கு அமெரிக்காவிலும், சரக்குப் போக்குவரத்து, மின் கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் கணினிகளைக் குறி வைத்து அந்த ரான்சம்வேர் தாக்கி வருகிறது. தனியார் நிறுவனங்களின் கணினிகளும் பாதிக்கப்பட்டதாகத் தெரிய வந்திருக்கிறது. சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனமான மேர்ஸ்க், கூரியர் நிறுவனமான ஃபெடரல் எக்ஸ்பிரஸ், உணவுப் பொருள் நிறுவனமான மொண்டேலெஸ், மருந்து நிறுவனமான மெர்க் ஆகியவற்றின் கணினிகளில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. உக்ரைனில் கடந்த புதன்கிழமை இந்த இணைய வைரஸ் தாக்குதல் நிகழ்ந்ததாகப் புகார் வந்துள்ளது. ஏ.டி.எம்.கள், விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பெட்யா என்கிற வைரஸ் கடந்த 2016-ஆம் ஆண்டு முதலே கணினிகளைத் தாக்கி வருவது தெரிந்ததுதான். கணினிகளை செயல்படத் தொடங்க வைக்கும் மாஸ்டர் பூட் மென்பொருள் கோப்பைத் தாக்கி ஆதிக்கம் செலுத்தும் தன்மையுடையது பெட்யா. இந்த வகை வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கணினியை மீட்பது இயலாத காரியம். இந்த வைரஸின் மேம்படுத்திய வகைதான் தற்போது பரவி வருகிறது.
தற்போதைய தாக்குதலிலிருந்து கணினிகள் மீள முடியாதது மட்டுமல்ல, கணினி மீண்டும் செயல்படத் தொடங்கினாலும், தகவல்கள் அனைத்தும் மீட்க முடியாமல் நிரந்தரமாக இழக்க நேரிடும்.
இதுவரை எத்தனை பேர், அல்லது எத்தனை நிறுவனங்கள், அமைப்புகள் புதிய இணைய வரைஸால் பாதிப்புக்கு உள்ளாகினர் என்பது தெரியவில்லை. தாக்குதல் குறித்த புகார்களைப் பெறவும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வுகள் அளிக்கவும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைத்துள்ளோம். நிலைமையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.
தனி நபர் அல்லது நிறுவனத்தின் கணினி இணைய வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானால், உடனடியாக இணையதள இணைப்பைத் துண்டித்து, அந்த கணினியைத் தனிமைப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட தனியாரோ, நிறுவனமோ ஊடுருவும் விஷமிகளுக்கு பிணைத் தொகை அளிக்க முற்படக் கூடாது. அவர்கள் உடனடியாக உள்ளூர் காவல் துறை சைபர் பிரிவையோ, யூரோபோல் காவல் துறையினரையோ தொடர்பு கொள்ள வேண்டும் என்று ராபர்ட் வெயின்ரைட் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com